ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்த துரைமுருகனுக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதவியா? என பாஜகவின் முன்னாள் தேசிய பொதுச் செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலூர் அடுத்த பெருமுகையில் உள்ள தனியார் கல்லூரியில், பாஜக சார்பில் 3 நாட்கள் பயிற்சி முகாம் இன்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பாஜகவின் முன்னாள் தேசிய பொதுச் செயலாளர் ஹெச்.ராஜா கலந்துகொண்டார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

”தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், கடலூர், நாகர்கோவில் மாவட்டங்கள் கனமழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டன. சென்னை கொளத்தூர் தொகுதியில் 10 ஆண்டுகளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எம்எல்ஏவாக உள்ளார். அங்கு மழைநீர் குட்டை போல் தேங்கி அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். எம்எல்ஏவாக மு.க.ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்குள்ள அவ்வை நகரில் 120 வீடுகளை இடித்துவிட்டு மேம்பாலம் அமைக்கப் போவதாகக் கூறுகிறார்கள்.

காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் 5 லட்சம் சதுர அடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனைக் கடந்த 13-ம் தேதி மோடி திறந்து வைத்தார். அந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்கிவிட்டுத்தான் கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், சென்னையில் 120 வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்காமல் அந்த இடத்தில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பது எந்த வகையில் நியாயம். இது மனித குணமற்ற செயல். தமிழகத்தில் மோசமான நிர்வாகம் நடந்து வருகிறது. நெருக்கடி நிலையை விடக் காட்டாட்சி நடக்கிறது. மக்களுக்கான திட்டங்களைத் தமிழக அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது. திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. இந்த ஆட்சி விரைவில் கவிழும்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவருடைய தொகுதியில் மட்டும் அல்ல தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் தடுப்பணை கட்டவில்லை. ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்குக் குடிநீர் கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்தவர் துரைமுருகன். இப்படிப்பட்டவருக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி குறித்துப் பல்வேறு மோசமான தகவல்கள் வருகின்றன. இது பற்றி விசாரிக்க வேண்டும். பாஜக மாநிலத் தலைவர் குறித்து அவர் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. அமைச்சர் ஆர்.காந்தி போன்றவர்களை முதல்வர் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமான பின் விளைவுகள் ஏற்படும்.

வேலூர் மாவட்டம் வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தேன். அந்தக் கோயிலில் வெள்ளித் தேர் இருந்தது. தற்போது அங்கு மரம் மட்டுமே மிச்சமாக உள்ளது. அதில் 128 கிலோ வெள்ளி கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வெள்ளியை அறநிலையத் துறையினர் கொள்ளையடித்துள்ளனர்.

கோயில்களில் அறநிலையத்துறை இருக்கக் கூடாது. அவற்றை அகற்ற வேண்டும். சென்னை தி.நகர் 78 ஏக்கர் ஏரியில் அமைந்துள்ளது. தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் வரை நீர்நிலை ஆக்கிரமிப்புகள் இருந்து கொண்டேதான் இருக்கும்”.

இவ்வாறு ஹெச்.ராஜா தெரிவித்தார்.

அப்போது, பாஜக மாவட்டத் தலைவர் தசரதன், துணைத் தலைவர் ஜெகன்நாதன் உட்பட பாஜக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.