ஆன்மிகப் பெரியவர்களின் ஆவேசக் குரலுக்கு அரசு எதிர்வினை ஆற்றாது என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை பெரம்பூர் சேமாத்தம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீலேக ஸ்ரீசடகோப ராஜாமானுஜர் ஜீயர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னை பெரம்பூர் சேமாத்தம்மன் கோயிலில் உள்ள குளத்தை ரூ.70 லட்சம் செலவில் சீரமைக்கவும், மண்டபங்களைச் சீரமைக்க ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யும் பணிகளும் நடைபெற உள்ளன. ஒரு ஆண்டுக்கு குறைந்தது 1,000 ஏக்கர் கோயில் சொத்துகள் மீட்கப்பட வேண்டும் என்று செயல்திட்டம் அமைத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்கப்படும் சொத்துகளுக்கு சுற்றுச்சுவர் அமைத்து, இந்து சமய அறநிலையத் துறை கோயிலுக்கு சொந்தமான சொத்து என கல் பதிக்கப்பட்டு வருகிறது.

ஜீயர்கள், ஆதீனங்கள் உள்ளிட்ட ஆன்மிகப் பெரியவர்கள் அவ்வப்போது வெளிப்படுத்தும் ஆவேசக் குரலுக்கு இந்த அரசு எதிர்வினை ஆற்றாது, அவர்களின் கோரிக்கையை கேட்டு நடவடிக்கை எடுக்கும்.

முதல்வரை ஆதீனங்கள் சந்தித்தபோது, பட்டினப் பிரவேசம் தொன்மையாக நடைபெறுவது வழக்கம் என்று குறிப்பிட்டனர். இதைத் தொடர்ந்து, முதல்வர் இதற்கு அனுமதி அளித்துள்ளார். மனிதநேயத்தோடு இதற்கு மாற்றுஏற்பாடு உள்ளதா என்பதை பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசியல்ரீதியாக தமிழகத்தில் ஒளிமயமான ஆட்சி நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் 1,500 கோயில்களுக்கு ரூ.1000 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீலேக ஸ்ரீசடகோப ராஜாமானுஜர் ஜீயர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசத்துக்கு அனுமதி அளித்ததற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். கிரிக்கெட் விளையாட்டில் வீரர்கள் வெற்றி பெறும்பொழுது, சக வீரர்கள் அவர்களை தூக்கிச்சுமப்பது போலத்தான் சிஷ்யர்கள் ஆதீனங்களை சுமக்க நினைக்கிறார்கள்’’ என்றார்.