திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத்திடம், பனியன் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.சம்பத் நேற்று அளித்த மனு விவரம்:

பனியன் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை அளிக்க வேண்டும். வேலை குறையும்போது சீனியாரிட்டி அடிப்படையில் வேலை அளிக்க வேண்டும். அனைத்து நிறுவனங்களிலும் சம வேலைக்கு சம ஊதியம், அனைத்து தொழிலாளர்களுக்கும் சட்டப்படியான சம வேலை நேரம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

புலம்பெயர் தொழிலாளர் சட்டம் 1979-ஐ அமலாக்க, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த சட்டத்தை பின்பற்றாமல் செயல்படும் தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் நலிவடைந்து வேலை வாய்ப்பு குறையும் போது, ஏற்கெனவே வேலையில் உள்ள தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்துவிட்டு, புதிய தொழிலாளர்களை தொழில் நிறுவனங்கள் பணியமர்த்தக்கூடாது.

பனியன் தொழிற்சங்கங்களுடன் உற்பத்தியாளர்கள் செய்துள்ள ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில், அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். திருப்பூர் மாவட்டத்தின் தொழில் அமைதி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அனைத்து தொழிலாளர்களின் நலனையும், பொது அமைதியையும் பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.