ஆயுதங்களுடன் சரணடைந்து மரியுபோலை ஒப்படைக்காவிட்டால் பேரழிவை சந்திக்க நேரிடும் என உக்ரைனுக்கு ரஷ்யா எச்சரித்துள்ளது.உக்ரைன் மீதான தாக்குதலை நாளுக்கு நாள் ரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது. மரியுபோல் துறைமுக நகரை 4 லட்சம் மக்களுடன் சிறைப்பிடித்து வைத்துள்ள ரஷ்யா பொதுமக்களை குறிவைத்து தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. 400 பேர் தங்கியிருந்த பள்ளியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்ய தாக்குதலில் உக்ரைனின் பொதுமக்கள் உயிரிழப்பு 1000 ஐ கடந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் மீதான தாக்குதலை அறிவித்தார். அன்று தொடங்கி இன்று வரை ரஷ்ய தாக்குதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியால் உக்ரைனும் போரைத் தாக்குப்பிடித்து வருகிறது.
இந்நிலையில், மரியுபோல் நகரில் ஆயுதங்களை விடுத்து உக்ரைன் படைகள் சரணடையாவிட்டால் பேரழிவை சந்திக்க நேரிடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

உக்ரைன் போரின் 10 அண்மைத் தகவல்கள்: * துறைமுக நகரான மரியுபோலை விட்டுக்கொடுத்து சரணடையுமாறு ரஷ்யா விதித்த கெடுவை ஏற்பதற்கில்லை என்று உக்ரைன் துணை பிரதமர் இரின வெரெஸ்சுக் தெரிவித்துள்ளார். ஆயுதங்களை விடுத்து சரணடையும் பேச்சுக்கே இடமில்லை. இதை நாங்கள் ஏற்கெனவே ரஷ்ய தரப்புக்கு தெரிவித்துவிட்டோம் என்று அவர் உக்ரைன் செய்தித் தாளான உக்ரைன்ஸ்கா பிரவ்டாவுக்கு தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு துறைமுக நகரான மரியுபோல் ரஷ்யாவின் பிரதான இலக்காக உள்ளது. மரியுபோலை கைப்பற்றினால் ரஷ்யப் படைகள் கிரிமீயாவுக்கு தரை மார்க்கமாக வந்து செல்ல முடியும். கிரிமீயாவை ரஷ்யா 2014ல் தன்னுடன் இணைத்தது.

மரியுபோலில் உள்ள 4 லட்சம் மக்கள் சொற்பமான உணவு, குடிதண்ணீருடன் கடுமையான நெருக்கடியில் உள்ளனர்.

இதற்கிடையில் கருங்கடலில் ரஷ்ய கடற்படை கமாண்டர் ஒருவர் கொல்லப்பட்டதாக செவாஸ்டாபோல் ஆளுநர் தெரிவித்துள்ளார். மரியுபோலில் நடந்த சண்டையில் கப்பலின் துணை கமாண்டரான ஆண்ட்ரெய் பாலி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்க் ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே இழப்புகளைக் குறைக்க முடியும் எனக் கூறியிருக்கிறார்.

உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவம் கின்சல் என்ற அதிநவீன ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்த ஏவுகணை மேற்பரப்பில் மட்டுமன்றி பூமிக்கு அடியில் உள்ள பதுங்கு குழிகள் வரை தகர்க்கும் திறன் கொண்டது. இரண்டு முறை இதைப் பயன்படுத்தியிருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

* இஸ்ரேல் நாடு உக்ரைனுக்கு துணை நிற்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக ஜெலஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். ரஷ்ய படையெடுப்பு விவகாரத்தில் இன்னும் நடுநிலைமை காக்காமல் யூத தேசம் தங்களை ஆதரிக்க வேண்டும் என்று ஜெலன்ஸ்கி கோரியுள்ளார்.

உக்ரைனில் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 1 கோடி மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். தேசத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் கால்வாசி பேர் நாட்டை காலி செய்துவிட்டு கிளம்பியதாக ஐ.நா.வின் அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் போரால் சர்வதேச கச்சா எண்ணெய்யின் விலை மேலும் 2 டாலர் அதிகரித்துள்ளது.

உக்ரைன் போரில் நேரடியாக அமெரிக்க வீரர்களைக் களமிறக்கப் போவதில்லை என அமெரிக்கா ஏற்கெனவே தெரிவித்துவிட்டது. இது ஒருபுறம் இருக்க சர்வதேச படையை அமைக்க உக்ரைன் அழைப்பு விடுத்திருந்தது. உலக நாடுகளில் உள்ள தன்னார்வலர்கள் உக்ரைன் போரில் ஈடுபடலாம் எனக் கூறியிருந்தது. இதனை ஏற்று அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று தன்னார்வலர்கள் தங்களை போரில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். அப்பாவி மக்கள் உயிரிழப்பைத் தடுக்க களமிறங்கியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.