collapsed-building-in-tiruvottiyur

திருவொற்றியூரில் இடிந்து விழுந்த கட்டிடம் தொடர்பாக 3 மாதங்கள் முன்னரே பொதுமக்கள் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை திருவொற்றியூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய (குடிசை மாற்று வாரியம்) குடியிருப்பின் ஒரு பாகம் நேற்று காலை இடிந்து விழுந்து தரைமட்டமானது. ஏற்கெனவே இந்த குடியிருப்பில் இருந்த பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் உயிர்சேதம் ஏற்படவில்லை. இந்நிலையில், நேற்று காலை அங்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே இங்கு வசித்த பொதுமக்கள் வாரியத்திடம் புகார் அளித்துள்ளனர். இங்கு வந்து ஆய்வு செய்து, வாழும் அளவுக்கு இருந்தால், சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தனர். ஆனால், இந்த அரசு கடந்த 3 மாதங்களாக என்ன செய்து கொண்டிருந்தது.

அப்போதே வந்து 25 ஆண்டுகளுக்கும் மேலான இந்த கட்டிடத்தின் ஸ்திரத்தன்மையை சோதனை செய்து, மாற்று இடம் கொடுப்போம் என்று தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், தற்போது உயிர்ச் சேதம் ஏற்படாவிட்டாலும், அவர்களின் உடமைகள் பணம், நகைகள் அனைத்தும் புதைந்து விட்டன.

அதிமுக ஆட்சியில் பல கட்டிடங்கள் ஸ்திரத்தன்மை ஆய்வு செய்யப்பட்டு, 25 ஆண்டுகளுக்கு மேல் ஆன கட்டிடங்கள் இடித்து கட்டப்பட்டுள்ளன. ஆனால், 3 மாதங்களாக முதல்வர் தனிப்பிரிவு, வாரியம் ஆகியவற்றில் அளித்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் விளைவு இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. இது அரசின் அலட்சியப்போக்கால் நடைபெற்ற சம்பவம்தான்.

வேறு இடத்தில் அவர்களுக்கு கட்டி கொடுக்கலாம். கார்கில் நகரில் தற்போது குடியிருப்பு வழங்கலாம். அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ரூ.1 லட்சம் போதாது கூடுதலாக ரூ.5 லட்சமாக வழங்க வேண்டும். 336 குடியிருப்புகள் உள்ளன. அவர்கள் கட்டிடத்தையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதுடன், வெளியேற்றப்பட்டால் 2 ஆண்டுகளுக்கு வீட்டு வாடகையை மார்க்கெட் நிலவரப்படி ஏற்கும் அளவுக்கு வழங்க வேண்டும். ஆபத்து தெரிந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுதான் முக்கியம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.