உலக சுகாதார நிறுவனம் கோவாக்சின் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ள விவகாரத்தில் தடுப்பூசியின் செயல்திறன், பாதுகாப்பு தொடர்பான எந்த அம்சமும் காரணம் இல்லை என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர், இந்தியன் வைராலஜி நிறுவனம் ஆகியவை இணைந்து கரோனா வைரஸுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்தனர்.

கரோனா தடுப்பூசி தொடர்பாக இந்தியாவில் ஆய்வு நடத்தப்பட்டபோது கோவிஷீல்ட்டில் கூடுதலான ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பு தன்மையை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கோவாக்சின் தடுப்பூசி டெல்டா போன்ற மரபணு உருமாறிய கரோனா வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய சுகாதார ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவித்தது. வயது வந்தோருக்கு மட்டுமின்றி 15 வயது முதல் 18 வயது கொண்ட பதின்ம வயதினருக்கும் கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

உலக சுகாதார நிறுவனம் அனுமதியளித்ததை தொடர்ந்து இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளில் பலவற்றிலும் கோவாக்சின் பயன்படுத்தப்படுகிறது. உலக சுகாதார நிறுவன அமைப்புகளும் கோவாக்சின் தடுப்பூசியை வாங்கி பயன்படுத்தி வந்தன.

இந்தநிலையில் உலகம் முழுவதும் கரோனா பரவல் குறைந்து வருவதாலும், பெருமளவு மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாலும் அதன் தேவை குறைந்து வருகிறது. இதனால் கோவக்சின் தடுப்பூசி உற்பத்தியை குறைக்கப் போவதாக பாரத் பயோடெக் நிறுவனம் ஏற்கெனவே தெரிவித்து இருந்தது. மேலும், நிறுவனத்தில் பல்வேறு வசதிகளை மேம்படுத்த இருப்பதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்தது.

கடந்த மாதம் 14-ம் தேதி முதல் 22ம் தேதி வரை உலக சுகாதார அமைப்பின் குழுவினர் பாரத் பயோடெக் நிறுவனத்தில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வுக்குப்பின் பாரத் பயோடெக் நிறுவனம் நேற்றுமுன்தினம் வெளியிட்ட அறிவிப்பில், கோவாக்சின் உற்பத்தியை குறைக்க இருப்பதாகத் தெரிவித்ததது.

இந்தஅறிவிப்புக்கு அடுத்ததாக, உலக சுகாதார அமைப்பு கோவாக்சின் சப்ளையே ஐ.நாவுக்கு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் கோவாக்சின் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ள விவகாரத்தில் தடுப்பூசியின் செயல்திறன், பாதுகாப்பு தொடர்பான எந்த அம்சமும் இல்லை என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கோவாக்சின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பில் எந்த தாக்கமும் இல்லை. கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட கோடிக்கணக்கானவர்களுக்கு, தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பில் எந்த பாதிப்பும் இல்லை. எனவே உலக சுகாதார அமைப்பு ஏற்கெனவே வழங்கிய தடுப்பூசி சான்றிதழ் இன்னும் செல்லுபடியாகும்.

இவ்வாறு தெரிவித்துள்ளது.