”பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அதிகாரத்தை மட்டுமே விரும்புகின்றன. இவர்கள் ஆட்சியையும் அதிகாரத்தையும் பெற எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.
அதிகாரத்திற்காக மணிப்பூரை எரிப்பார்கள், முழு நாட்டையும் எரிப்பார்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. 3 மாதங்களாக மணிப்பூர் கலவரம் நடைபெறும் நிலையில், இதுவரை அம்மாநில அரசு மற்றும் மத்திய அரசால் இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை. இதனை கண்டித்தும்,
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் 6-ஆவது தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுள்ளன.
இதனால் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்தே நாடாளுமன்றம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. நேற்று காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் ஆகிய கட்சிகள் சார்பில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுள்ளார்.
இந்த நிலையில், இன்று எதிர்கட்சி எம்பிக்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து நாடாளுமன்றத்துக்கு வந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
மேலும் மணிப்பூருக்கு நேரில் செல்லவும் எதிர்கட்சிகளின் எம்பிக்கள் குழு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சமீபத்தில் அவதூறு வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவருமான ராகுல் காந்தி இதுகுறித்து தனது குரலை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில், ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:
”பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அதிகாரத்தை மட்டுமே விரும்புகின்றன. இவர்கள் ஆட்சியையும் அதிகாரத்தையும் பெற எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.
அதிகாரத்திற்காக மணிப்பூரை எரிப்பார்கள், முழு நாட்டையும் எரிப்பார்கள். ஹரியானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களை எரிப்பார்கள். முழு நாட்டையும் எரித்து விடுவார்கள். அவர்கள் நாட்டின் துயரம் மற்றும் வலியைப் பற்றி கவலைப்படுவதில்லை.
தமிழ் மற்றும் வங்க மொழி பேசுவோரை பார்த்தால் பாஜகவினருக்கு வலியை ஏற்படுத்துகிறது. அவர்களுக்கு வருத்தமாக இருக்கிறது. அவர்களின் மனநிலை மோசமாகவிடுகிறது. ஆனால் பாஜக-ஆர்எஸ்எஸ் இந்தியாவைப் பிளவுபடுத்தும் வேலையைச் செய்வதால் அவர்களுக்கு எந்த வலியும் இல்லை.”
இவ்வாறு அந்த வீடியோவில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.