அனைத்து காவல்நிலையங்களி லும் சிசிடிவி கேமராக்களை அடுத்த 5 மாதங்களுக்குள் பொருத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணைக்கு வருபவர்கள் மற்றும் கைதிகள் மீதான சித்ரவதைகளை தடுக்க, அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்றுஉச்ச நீதிமன்றம் கடந்த 2018-ம்ஆண்டு தீர்ப்பளித்தது. ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் இந்த உத்தரவு அமல்படுத்தப்படாமல் உள்ளது.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஒருவரை போலீஸ் சித்ரவதைசெய்த வழக்கில் இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எப்.நாரிமன் தலைமையிலான அமர்வு மீண்டும் விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

இதனிடையே, இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்தஆண்டு டிச.2-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த தேவையான, போதுமான நிதியை மாநில அரசுகள் உடனடியாக ஒதுக்கவேண்டும்.

அனைத்து போலீஸ் நிலையங்களின் நுழைவாயிலிலும், லாக்அப்-களிலும், காரிடார்களிலும், லாபி, ரிசப்ஷன், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் அறைகளிலும், லாக்அப்புக்கு வெளியேயும், போலீஸ் நிலையத்தின் சுற்றுச்சூழல் வெளிப்புறத்திலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். இதுதொடர்பாக விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் சிபிஐ, தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), அமலாக்கத் துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு, வருவாய்ப் புலனாய்வு, தீவிர நிதி மோசடி விசாரணை அலுவலகம் போன்ற விசாரணை அமைப்புகளின் அனைத்து அலுவலகங்களிலும் சிசிடிவி கேமராக்கள், படப் பதிவுக் கருவிகளை பொருத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அப்போது உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.எப்.நாரிமன் தலைமையிலான நீதிபதிகள் பி.ஆர்.கவாய்,ரிஷிகேஷ் ராய் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் நேற்று முன்தினம் காணொலி வழியாக விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை அமைப்புகளின் அலுவலகங்களில் இன்னும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாததால், இந்த விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கோரிக்கை விடுத்தார்.

அதற்கு, ‘இது மனித உரிமை மீறல் பிரச்சினை; எனவே, மத்திய அரசு அவகாசம் கேட்பதையோ, அரசின் விளக்கத்தையோ நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

‘விசாரணை அமைப்பு அலுவலகங்களில் சிசிடிவி பொருத்துவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா?’ என்று அப்போது நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று துஷார் மேத்தா கோரிக்கை விடுத்தார்.

அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘சிசிடிவி கேமராக்கள் பொருத்த நிதி ஒதுக்கீடு, அந்த கேமராக்கள் எப்போது பொருத்தப்படும் என்பது குறித்து 3 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

5 மாநிலங்கள் தவிர

சிசிடிவி பொருத்தும் விவகாரத்தில் உரிய நிதியை ஒதுக்க ஹரியாணா மாநிலம், தேர்தல் நடைபெறும் மாநிலங்களை (தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, கேரளா) தவிர்த்து, ஏனைய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவை அமலாக்கும் காலவரிசை விவரங்களை 4 மாதங்களுக்குள் தெரிவிக்கவும், நிதி ஒதுக்கிய பிறகுஉச்ச நீதிமன்ற உத்தரவுகளை 5மாதங்களுக்குள் செயல்படுத்தவும் உத்தரவிட்டனர்.