புதுடெல்லி
கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு தற்போது அதிக வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக  கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

எனினும் புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுடங்காமல் பரவியதால், இங்கிலாந்து  தடுமாறியது. ஒருபக்கம் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்னொரு புறம் வைரஸ் பரவல் வேகமாக உள்ளது.  இதையடுத்து,  இங்கிலாந்து முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார். 
இந்த நிலையில் ஜனவரி 26 அன்று நடைபெறும் இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் முதன்மை விருந்தினராக கலந்து கொள்ள இருந்தார்.  இங்கிலாந்தில்  தொற்றுநோயைக் கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை தொடர்ந்து போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கான திட்டமிட்ட பயணத்தை ரத்து செய்து உள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு  பேசினார். அப்போது  திட்டமிட்டபடி இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வர  முடியாது என்று வருத்தம் தெரிவித்து உள்ளார்.  என இங்கிலாந்து அரசு  தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.