‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’ திரைப்படம் இந்தியாவில் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்துள்ளது.

லெஜண்ட்ரி நிறுவனம் மான்ஸ்டர்வெர்ஸ் என்ற பெயரில் சில படங்களைத் தயாரித்து வருகிறது. இதில் ‘காட்ஸில்லா’ (2014), ‘காங்: தி ஸ்கல் ஐலேண்ட்’ (2017), ‘காட்ஸில்லா: கிங் ஆஃப் மான்ஸ்டர்ஸ்’ (2019) ஆகிய படங்கள் அடக்கம். இப்படங்களின் தொடர்ச்சியாகத் தற்போது ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஆடம் விங்கார்ட் இயக்கினார்.

கரோனா அச்சுறுத்தலால் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்ட இப்படம் ஒருவழியாக திரையரங்குகளுகளில் வெளியானது ஹாலிவுட் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த புதன் (24.03.2021) அன்று வெளியான இந்த ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’ படம் இந்தியாவில் மிகப்பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கரோனா அச்சுறுத்தலால் பொதுமக்கள் திரையரங்குகளுக்கு வந்து படம் பார்ப்பது குறைந்துவிட்ட சூழலில் ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’ படம் முதல் வாரத்தில் ரூ.28.96 கோடி வசூல் செய்துள்ளது. இதில் 60 சதவீத தென்னிந்தியத் திரையரங்குகளில் வசூலான தொகை என்றும் கூறப்படுகிறது.

மேலும், கரோனா தொற்றுக்கு முன்பு வெளியாகியிருந்தால் இப்படம் முதல் வாரத்திலேயே ரூ.50 கோடி வசூல் செய்திருக்கும் என்று சினிமா நிபுணர்கள் கூறுகின்றனர். இப்படம் வெளியான முதல் நாளில் மட்டுமே ரூ.6.40 கோடி வசூலித்துள்ளது. கரோனாவுக்குப் பின்னர் வெளியான ஹாலிவுட் படங்களோடு ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய சாதனை என்று கூறப்படுகிறது.