திருச்சி மாநகரில் உய்யக்கொண் டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை முழுமையாக தடுக்கும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.175 கோடி மதிப்பீட்டில் பிரத்யேகமான புதிய புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

திருச்சி மாவட்டம் பேட்டை வாய்த்தலையில் தொடங்கி திரு வெறும்பூர் வட்டம் வாழவந் தான்கோட்டை வரை 69 கி.மீ தொலைவுக்கு ஓடுகிறது உய்யக் கொண்டான் வாய்க்கால். பின்னர், அங்கிருந்து 3 நீட்டிப்பு வாய்க்கால்களாக செங்கிப்பட்டி வரை செல்கிறது. பலநூறு ஆண் டுகளாக உயிர்ப்புடன் இருந்து மக்களுக்கு பலன் கொடுத்து வந்த இந்த வாய்க்காலில், காலப் போக்கில் குப்பை கொட்டப் பட்டும், கழிவுநீர் கலந்தும் சாக்கடையாகவே மாறிவிட்டது.

உய்யக்கொண்டான் வாய்க் காலில் குப்பை கொட்டுவதைத் தடுக்கவும், கழிவுநீர் கலப்பதைத் தடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தன. ஆனாலும், பலன் கிடைக்கவில்லை.

இதனிடையே, மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக பொறுப்பேற்ற கே.என்.நேரு, அண்மையில் மாநகராட்சி அலுவ லர்களுடன் நடத்திய ஆலோச னைக் கூட்டத்தில், கழிவுநீர் கலப் பதை முழுமையாக தடுத்து நிறுத் திவிட்டாலே உய்யக்கொண்டான் வாய்க்கால் தூய்மையாகிவிடும் என்று அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகளின் தலா 50 சதவீத பங்களிப்புடன் ரூ.175 கோடியில் புதிய புதை சாக்கடைத் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியது: 1987-ல் திருச்சி நகராட்சியாக இருந்தபோது அமைக்கப்பட்ட புதை சாக்கடை கழிவு சேகரிப்புத் தொட்டிகள், குழாய்கள் ஆகியவை கடந்த 34 ஆண்டுகளில் தனது தரத்தை இழந்திருக்கும். இதன் காரணமாக உடைப்பு நேரிட்டு கழிவுநீர் கலப்பதுடன், மறைமுகமாகவும் உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் திறந்துவிடப்படுகிறது.

எனவே, பழைய சாக்கடை கழிவு சேகரிப்புத் தொட்டிகள், சாக்கடை குழாய்களை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்கப்பட்டு, பஞ்சப்பூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் இணைக்கப்படவுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இதற்கென ரூ.175 கோடியில் பிரத்யேகமாக மேற்கொள்ளப்படவுள்ள இந்தத் திட்டம் நிறைவடைந்தால் உய்யக் கொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பது முழுமையாக தடுத்து நிறுத்தப்படும். இத்திட்டத்தை 2 ஆண்டுகளுக்குள் செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

இதுதொடர்பாக ‘சிட்டிசன் பார் உய்யக்கொண்டான்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மனோஜ் தர்மர் கூறியது:

உய்யக்கொண்டான் வாய்க் காலில் கழிவுநீர் கலப்பதாலும், குப்பை கொட்டப்படுவதாலும் நகரின் அழகு, சுகாதாரம் கேள் விக்குறியாக மாறியுள்ளது. எனவே, இந்த வாய்க்காலில் கழிவுநீர் கலக்காமலும், குப்பை கொட்டப்படாமலும் தடுக்க வேண் டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்தநிலையில், இதற்காக புதிய திட்டத்தை மாநகராட்சி மேற்கொள்ளவிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் புதை சாக்கடை திட்டத்தால் மக்கள் அனுபவித்து வரும் இன்னல்கள் நேரிடாமல், இந்த புதிய திட்டத்தை முறையாக திட்டமிட்டு, ஒவ்வொரு பகுதியாக முடிக்க வேண்டும் என்றார்.