உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனில் நியூசிலாந்து அணிக்கெதிராக வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வதில் இந்திய அணி நிர்வாகத்திற்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த ஆட்டம் இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் வருகிற 18-ந்தேதி தொடங்கிறது. இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் இந்திய அணியின் ஆடும் லெவன் குறித்து ரசிகர்கள் விவாதம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
ரோகித் சர்மா, ஷுப்மான் கில், புஜாரா, விராட் கோலி, ரகானே, ரிஷப் பண்ட் ஆகிய ஆறு பேரின் இடம் உறுதி என்பதில் சந்தேகமில்லை. ஜடேஜா, அஷ்வின் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளராக களம் இறங்குவார்கள்.
அப்படி என்றால் இந்தியா மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடும். ஆஸ்திரேலியா தொடரின்போது பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா இல்லாமல் இளம் வீரர்கள் அசத்தினர். இதில் முகமது சிராஜ் அபாரமான பந்து வீசினார். இந்திய அணி 2-1 என ஆஸ்திரேலியாவை வெல்ல முகமது சிராஜியின் பந்து வீச்சும் முக்கிய காரணமாக இருந்தது. இவர் 13 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். பிரிஸ்பேன் மைதானத்தில் 73 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார்.
தற்போது பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகிய ஐந்து பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இவர்களில் மூன்று பேரைத்தான் தேர்வு செய்ய முடியும். இந்திய அணி நிர்வாகம் முகமது சிராஜை களம் இறக்க ஆர்வமாக உள்ளது. அப்படி என்றால் முகமது ஷமி, பும்ரா, இஷாந்த சர்மா ஆகியோரில் ஒருவர் வெளியில் இருக்க வேண்டும்.
இந்த நிலையில் டுவிட்டர்வாசிகள் பும்ரா (Bumrah), உலக சாம்பியன்ஷிப் (WTC 2021 Final) ஹேஸ்டேக் உருவாக்கி வேகப்பந்து வீச்சாளர்களில் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து காரசார விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி

சிலர் பும்ரா சமீப காலமாக விக்கெட் வீழ்த்தவில்லை. அவருக்குப் பதிலாக முகமது சிராஜை சேர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். சிலம் வெளிநாட்டில் பும்ரா 50 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். அவரை நீக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.
ஒட்டுமொத்தத்தில் இந்திய அணி நிர்வாகத்திற்கு வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வதில் மிகப்பெரிய தலைவலியை உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை.