சென்னை : ஊடகங்களை மிரட்டிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் நேற்று முன்தினம் அண்ணாமலைக்கு பாஜவினர் வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசுகையில், ஊடகங்களை  நீங்கள் மறந்து விடுங்கள். நம்மைப்பற்றி பொய்யா செய்தி போடுறாங்க. அடுத்த ஒரு ஆறு மாதத்தில் நீங்க பாப்பீங்க. மொத்த ஊடகங்களையும் நம்ம கட்டுப்பாட்டுக்குள்ள வந்துரும். முன்னாள் மாநில தலைவர் முருகன்  தற்போது செய்தி ஒளிபரப்பு துறை இணை அமைச்சராகி இருக்கிறார். எல்லா  ஊடகங்களும் அவருக்கு கீழேதான் வரப்போகுது என்று பேசினார். ஊடகங்களை பகிரங்கமாக மிரட்டும் வகையில் அண்ணாமலை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் ஊடகங்களை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவோம் என மிரட்டியுள்ள அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சன்யா வலியுறுத்தியுள்ளார் . இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் எல்.முருகனை வைத்து அனைத்து ஊடகங்களையும் ஆறே மாதத்திற்குள் எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவோம் என மிரட்டியுள்ள அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.