Site icon Metro People

எதிர்கட்சி துணைத்தலைவராக ஓபிஎஸ் தேர்வு: அதிமுக கொறடா உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு

அதிமுக சட்டப்பேரவை நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓபிஎஸ்ஸும், கொறடாவாக எஸ்.பி.வேலுமணியும் தேர்வு செய்யப்பட்டனர்.

2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றிய திமுக ஆட்சி அமைத்தது. 65 இடங்களைக் கைப்பற்றிய அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்வு செய்யும்போது ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே போட்டி நிலவியது. பின்னர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனாலும் கட்சி கொறடா, சட்டப்பேரவை அதிமுக துணைத் தலைவர் ஆகியோரைத் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்தது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 21-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் கொறடா, சட்டப்பேரவை அதிமுக துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி, அடையாள அட்டையுடன் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகளும், கட்சித் தொண்டர்களுக்கும் அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் கட்சி கொறடா, சட்டப்பேரவை அதிமுக துணைத் தலைவரைத் தேர்வு செய்வது குறித்தும் மற்ற நிர்வாகிகள் தேர்வு குறித்தும் ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டது.

3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில்

*சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார்.

*கட்சிக்கொறடாவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமனி தேர்வு செய்யப்பட்டார்.

* துணைக்கொறடாவாக அரக்கோணம் சட்டப்பேரவை உறுப்பினர் ரவி தேர்வு செய்யப்பட்டார்.

* பொருளாளராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தேர்வு செய்யப்பட்டார்.

* செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தேர்வு செய்யப்பட்டார்.

* துணைச் செயலாளராக ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் மனோஜ் பாண்டியன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தக்கூட்டத்தில் சசிகலாவுடன் ஆடியோவில் யாராவது பேசினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவெடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

Exit mobile version