கொல்கத்தா: தன்னுடைய போனும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டின், என்.எஸ்.ஓ., நிறுவனம் தயாரித்த பெகாசஸ் என்ற மென் பொருள் மூலம், இந்தியாவில் முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் ஓட்டு கேட்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கோஷர் உள்ளிட்ட பலரின் செல்போன் உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன.இந்த பெகாசஸ் விவகாரம் நாடு முழுவதும் விஸ்வரூபமெடுத்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்கும்படி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.மேலும் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒருசேர கோரிக்கை விடுத்துள்ளன. இந்த நிலையில் தன்னுடைய போனும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து முதன் முறையாக மனம் திறந்த அவர் கூறியதாவது:-பெகாசஸ் ஸ்பைவேர் மிகவும் ஆபத்தானது. எனது போனும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. இதனால் முக்கிய தலைவர்களுடன் என்னால் போனில் பேச முடியவில்லை. மக்கள் பணிகளுக்கு பணம் செலவழிப்பதற்கு பதிலாக எதிர்கட்சிகளை உளவு பார்ப்பது போன்ற பணிகளில் அதிக பணத்தை கொட்டி வருகின்றனர். முக்கிய பிரமுகர்கள் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன.ஏன் அமைச்சர்கள், நீதிபதிகள் போன்கள் கூட ஒட்டு கேட்கப்பட்டு உள்ளன. இது லேசான விஷயம் கிடையாது. எனவே எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த விவகாரம் தொடர்பாக ஒன்று சேர வேண்டும்.
கடுமையாக போராட வேண்டும். இது தவிர நீதித்துறையால் மட்டுமே நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க முடியும் என்ற நிலை வந்து விட்டது. எனவே பெகாசஸ் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
#NewsUpdates #MetroPeople #MamtaBanerjee