ஒப்பந்தங்கள் கோரும்போது நேரடியாக முன்வைப்பு தொகை பெறுவது கூடாது என்ற ஆணையை மீறிய செயற்பொறியாளர் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி நேற்று (ஜூலை 16) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“பெருநகர சென்னை மாநகராட்சியில் ஒப்பந்தங்கள் கோரப்படும்போது அதற்கான முன்வைப்பு தொகை (EMD) ஆன்லைன் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மணலி மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட ஒப்பந்த பணிக்காக ஆன்லைனில் ஒப்பந்தம் கோரப்பட்டு முன்வைப்பு தொகையும் ஆன்லைனில் பெறப்பட்டது. இதற்கிடையே, குறிப்பிட்ட ஒப்பந்த பணிக்கான முன்வைப்பு தொகை (EMD) நேரடியாக மண்டலத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் செலுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட செயற்பொறியாளரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, புகார்கள் மாநகராட்சியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஒப்பந்தங்கள் கோரும்போது பெட்டி வைத்து நேரடியாக முன்வைப்பு தொகை பெறுவது கூடாது எனவும், ஆன்லைனில் மட்டுமே பெறவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்ட ஆணையை மீறி செயல்பட்ட மணலி மண்டலத்தின் செயற்பொறியாளர் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், மணலி மண்டலத்தில் கோரப்பட்ட குறிப்பிட்ட அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, மாநகராட்சியின் சார்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.