கடந்த பிப்ரவரியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் கரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக செயல்பட முடியவில்லை என்று பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இதுதொடர்பாக நேற்று நடந்த விவாதம்:

அரக்கோணம் உறுப்பினர் சு.ரவி(அதிமுக): தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளிவர 3 நாட்கள் ஆகிறது. இந்த தாமதத்தால் அதிக அளவில் தொற்று பரவுகிறது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: கடந்த மாதம் 21-ம் தேதி கரோனா பாதிப்பு36 ஆயிரமாக இருந்தது. அப்போது, பரிசோதனை முடிவுகள் வெளிவர தாமதமானது. தற்போது 24 மணி நேரத்தில் முடிவுகள் வழங்கப்படுகின்றன. கரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் நிவாரணம் அளிப்பது சாத்தியம் இல்லை. அவ்வாறு அளிப்பதாக மத்திய, மாநில அரசுகளும் தெரிவிக்கவில்லை. கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நாட்டிலேயே தமிழகத்தில்தான் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னரே மத்திய அரசும் அறிவித்தது.

உறுப்பினர் ரவி: டாஸ்மாக் கடைகள்திறக்கப்பட்டுள்ளதால், தொற்று அதிகரிக்கிறது. எனவே, அவற்றை மூடவேண்டும்.

அமைச்சர் செந்தில்பாலாஜி: தொற்றுஅதிகம் உள்ள 11 மாவட்டங்களில் கடைதிறக்கப்படவில்லை. இதர மாவட்டங்களில் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து காய்கறி வாகனங்களில் மது கடத்தப்பட்டு, தமிழகத்தில் ரூ.150-க்கான மதுவை ரூ.1,000-க்கு விற்கின்றனர். கள்ளச் சாராயம் அதிகரிக்கக் கூடாது என்பதாலேயே, தொற்று குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: கடந்த ஆட்சியில் கரோனா பாதிப்பு 7 ஆயிரமாக குறைந்தபோது மதுக்கடைகளை திறந்த நிலையில், அதை மூடுமாறு, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இப்போதைய முதல்வர் போராட்டம் நடத்தினார். இப்போது தொற்று அதிகரித்துள்ள நிலையில் கடைகளை திறந்து வைத்துள்ளீர்களே என்றுதான் உறுப்பினர் ரவி கேட்கிறார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: மே7-ம் தேதிக்கு முன்பு வரை அதிமுக காபந்து அரசுதான் இருந்தது.

பழனிசாமி: கடந்த பிப்ரவரியில் கரோனா கட்டுப்படுத்தப்பட்டு, பாதிப்புஎண்ணிக்கை 481 ஆக இருந்தது. அப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், தொடர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது.

அமைச்சர் எ.வ.வேலு: ஆனால், தேர்தல் அறிவித்த பிறகு, கரோனாவை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் பேட்டி அளித்தார். அப்போது அவர் செயல்பட்ட தாகவே எடுத்துக்கொள்ள முடியும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.