ஆந்திர மாநிலத்தில் உள்ள கண்டலேறு அணையில் இருந்துவிநாடிக்கு 500 கனஅடி வீதம் கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூன் 16) காலை கிருஷ்ணா நீர் தமிழக எல்லையை வந்தடையும் என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையின் குடிநீர்த் தேவைக்காக, தெலுங்கு கங்கை திட்டத்தின்கீழ் ஆந்திர அரசு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி-யும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி-யும் கிருஷ்ணா நதி நீரை வழங்க வேண்டும்.

அந்த வகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி முதல் பிப்ரவரி 20-ம் தேதி வரை கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது. மொத்தம் 7.656 டிஎம்சி நீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்துள்ளது.

கடந்த ஒன்றரை மாதங்களாக ஆந்திர மாநில விவசாயத் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 1,600 கனஅடி வீதம் கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையின் குடிநீர்த் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீரைத் திறக்கவேண்டும் என்று ஆந்திர அரசிடம் அண்மையில் தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் காலை கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி வீதம் கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டுள்ளது.

கண்டலேறு அணையில் இருந்து 152 கி.மீ. தொலைவில்உள்ள, தமிழக எல்லையானஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்டுக்கு இன்று காலை கிருஷ்ணா நீர் வந்தடையும் என்று எதிர்பார்ப்பதாக தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.