கரோனா 3-வது அலை தொடர்பாக ஐஎம்ஏ என அழைக்கப்படும் மருத்துவர் சங்கம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் கன்வர் யாத்திரையை இந்த ஆண்டு ரத்து செய்ய வேண்டும் என உத்தரகாண்ட் மாநில அரசை இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா 2-வது அலையின் தாக்கம் குறையத் தொடங்கியதையடுத்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

கரோனா தடுப்பு வழிமுறைகளான சமூக விலகல், முகக்கவசம், தடுப்பூசிசெலுத்துதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவற்றை முறையாகப் பின்பற்றாவிட்டால், 3-வது அலை விரைவாக வருவது சாத்தியம் என்று ஏற்கெனவே மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

ஐஎம்ஏ என அழைக்கப்படும் மருத்துவர் சங்கமும் கரோனா 3-வது அலை தொடர்பாக நேற்று எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதுகுறித்து ஐஎம்ஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்ததாவது:

நாடுமுழுவதும் தற்போது தினசரி கரோனா பாதிப்பு 40 ஆயிரத்துக்கு குறைந்தாலும் கரோனா 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. சில மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பும் காணப்படுகிறது.

உலகம் முழுவதும் எப்போது பெருந்தொற்று ஏற்பட்டாலும் 3 அலை வருவதை தவிர்க்க முடியாது. வரலாறு இதனை உணர்த்துகிறது. ஆனால் வேதனையான ஒன்று என்னவென்றால் 3-வது அலையை நாமே விரும்பி வரவேற்கும் விதமாக சம்பவங்கள் நடக்கின்றன. நாட்டின் பல பகுதிகளில் மக்களும் சரி, அரசு நிர்வாகமும் சரி மக்கள் கூட்டம் கூட்டமாக திரள வழி வகை செய்கின்றனர். எங்கும் கரோனா வழிகாட்டும் நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.

நாடு தற்போதுள்ள சூழலில் சுற்றுலா, மதவழிபாடு, ஆன்மீக பயணம் போன்றவை தள்ளிப்போடலாம். இதுகுறித்து அரசும் மக்களும் சிந்திக்க வேண்டும். இதுபோன்றவற்றை திறந்து விடுவதால் பெருமளவு கரோனா பரவலுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. தடுப்பூசி போடாமல் மக்கள் பொது இடங்களில் இதுபோன்று கூடுவது கரோனாவை வேகமாக வரவழைக்கும் செயலாக முடியும். 3-வது அலையை விரும்பி அழைக்கும் செயலாகி விடும். எனவே அனைவரும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

தடுப்பூசி செலுத்துவதால் கரோனா தொற்று குறைகிறது. குறிப்பாக மரணங்கள் குறைகிறது. இந்தியாவில் நாள்தோறும் 40 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், கிராமப்புறங்களோடு நகர்புறங்களை ஒப்பிடுகையில் தடுப்பூசி செலுத்தும் வீதம் கிராமங்களில் குறைவாக இருந்து வருகிறது.

இவ்வாறு தெரிவித்து இருந்தது.

இதனைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் கொண்டாடப்படும் கன்வர் யாத்திரையை இந்த ஆண்டு ரத்து செய்ய வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் உத்தரகாண்ட் மாநில கிளை முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில் கொண்டாடப்படும் கன்வர் யாத்திரையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதுபோன்ற ஆன்மீக நிகழ்வுகள் கரோனா பரவலை பெருமளவு கொண்டு வந்து சேர்க்கும் எனவும் 3-வது அலையை தடுக்க முடியாமல் போகும் எனவும் எச்சரித்துள்ளது.


கன்வர் யாத்திரை என்பது பல பகுதிகளில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார், ரிஷிகேஷ் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் ஆண்டுதோறும் பாத யாத்திரயைாக செல்வது வழக்கம்.