கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு, சென்னையில் சிகிச்சை பெற்று வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த பெண் நேற்று உயிரிழந்தார்.

மயிலாடுதுறை வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் முத்து. இவர் சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி மீனா(45), சீர்காழி கூட்டுறவு மருந்தகத்தில் மருந்தாளுநராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த ஏப்.12-ம் தேதி மீனா, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

வீடு திரும்பிய 6 நாட்களுக்குப் பிறகு, மீனாவுக்கு இடது கண்ணில் வலியுடன், பார்வை குறைபாடும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர் சென்னைஅப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில், மீனாவுக்கு கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த 14-ம் தேதி அவரது இடது கண் அகற்றப்பட்டது. மேலும், மீனாவுக்கு சர்க்கரை நோய் இருந்ததால், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மீனா நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது உடலை குடும்பத்தினர் மயிலாடுதுறைக்கு எடுத்து வந்து, நேற்று காலை தகனம் செய்தனர்.

கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மீனா உயிரிழந்த தகவலை, நாகை ஆட்சியர் பிரவீன் பி.நாயர் மற்றும் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கான கொள்ளை நோய் சிகிச்சை நிபுணர் மருத்துவர் லியாகத் அலி ஆகியோரும் உறுதிப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here