கரோனா வைரஸ் பாதிப்பில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தால், உயிரிழந்தவருக்கு 60 வயது நிறைவடையும்வரை அவரின் குடும்பத்தினருக்கு ஊதியம் வழங்கப்படும் என்று டாடா ஸ்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் 2-வது அலை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் தொற்றுக்கு ஆளாகின்றனர், ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து 577 குழந்தைகள் பெற்றோரை கரோனாவில் இழந்து ஆதரவற்ற நிலைக்கு சென்றுள்ளன.
இதுபோன்ற பல்வேறு துன்பங்களை கரோனா பாதிக்கப்பட்டோருக்கு அளித்து வருகிறது.
இந்த சூழலில் டாடா ஸ்டீல் நிறுவனம் கரோனாவில் உயிரிழந்த தனது ஊழியர்களின் குடும்பத்துக்கு சமூகபாதுகாப்பு உதவிகளை அறிவித்துள்ளது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
கடந்த 23ம் தேதி ஜாம்ஷெட்பூரை தலைமையிடமாகக் கொண்ட டாடா ஸ்டீல் நிறுவனம் ட்விட்டர் தளத்தில் ஊழியர்களுக்கான சமூக பாதுகாப்பு உதவியை அறிவித்துள்ளது. இதன்படி “ கரோனாவில் உயிரிழந்த ஊழியருக்கு 60 வயது நிறைவடையும்வரை அவர் கடைசியாகப் பெற்ற ஊதியம் ஒவ்வொரு மாதமும், குடும்பத்தினருக்கு வழங்கப்படும்
அதுமட்டுமல்லாமல், உயிரிழந்த ஊழியரின் குடும்பத்தாருக்கு மருத்துவ வசதியும், வீட்டு வசதிகளும் தொடர்ந்து வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் முன்களப்பணியாளராக இருந்து அவர் கரோனாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால், அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்விச்செலவையும், பட்டப்படிப்பு முடிக்கும் வரை டாடா நிறுவனம் ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாடா ஸ்டீல் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் “ கரோனாவில் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் குடும்பத்தினருக்கு சமூக பாதுகாப்பு உதவிகளை மிகுந்த ஈடுபாட்டுடன் கவனிப்புடன் டாடா ஸ்டீல் நிறுவனம் வழங்குகிறது.
எங்களால் முடிந்ததை நாங்கள் செய்யும்போது, இந்த கடினமான நேரத்தில் ஒவ்வொரும் தங்களால் முடிந்தவற்றை சுற்றியுள்ள மக்களுக்குச் செய்ய வேண்டும்”எனத் தெரிவித்துள்ளது.
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு சமூக வலைத்தளத்தில் அந்த நிறுவனத்துக்கு பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுக்கொடுத்துள்ளது. நெட்டிசன்கள் டாடா நிறுவனர் ரத்தன் டாடாவை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.