கேரளாவில் கரோனா வைரஸ் 2-வது அலையின் பாதிப்பே இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதற்குள் ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ் தொற்று இருப்பது ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டு, 13 பேரின் மாதிரிகள் புனேயில் உள்ள தேசிய வைரலாஜி ஆய்வக நிறுவனத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளது கேரள அரசு
கடந்த மாதம் சிகிசைக்கு வந்த 24வயதான கர்ப்பணி பெண்ணுக்கு காய்ச்சல், தலைவலி, தோலில் தடிப்புகள் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டதாக கேரள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜிகா வைரஸ் பாதிக்கப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும். ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ், மஞ்சள் காய்ச்சல், டெங்கு காய்ச்சலும் பரவுகிறது.
கர்ப்பிணிப்பெண்களுக்கு பரவினால், அவர் மூலம் வயிற்றில் உள்ள சிசுவும் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவு ஏற்படலாம். இதனால் குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவும் கூட சில நேரங்களில் ஏற்படலாம். மேலும், ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நபருடன் உடல்ரீதியான உறவு வைத்துக்கொண்டாலும் இந்த வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது.
ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள்வரை உடலில் இருக்கும் பாதிப்பு ஏற்பட்ட 2 முதல் 7 வது நாளில் அறிகுறிகள் காணப்படும். இதுவரை ஜிகா வைரஸுக்கு எந்தத் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அதிகமான ஓய்வு, திரவ உணவுகளை சாப்பிடுவது, உடல்வலி, காய்ச்சலுக்கான மருந்துகளை வழங்குவதுதான் இதற்கு மருத்துவம் என்று உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது. கொசுக்கடிகளை தவிர்ப்பதன் மூலமே ஜிகா வைரஸ் பாதிப்பிலிருந்து காக்க முடியும்.
குறிப்பாக கர்ப்பணிப் பெண்கள், குழந்தைகள், வயதுக்கு வரும் நிலையில் இருக்கும் பெண் குழந்தைகளை கொசுக்கடியிலிருந்து காக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது