கரோனா ஊரடங்கால் தொலை தூர நகரங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு வெற்றிலைகளை அனுப்ப முடியாததால் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் வெற்றிலை விவசாயிகள் கடும் பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.
தமிழகத்தில் மதுரை, தஞ்சாவூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வெற்றிலை சாகுபடி நடைபெற்றாலும், தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகுதியில் விளையும் வெற்றிலைக்கு அதிக வரவேற்பு உண்டு. தாமிரபரணி தண்ணீரின் வளம் மற்றும் ருசி தான் அதற்கு காரணம். வெற்றிலையில் நாட்டுக்கொடி, கற்பூரம், திருகாமணி எனப் பல வகைகள் இருந்தும் இப்பகுதியில் நாட்டுக்கொடியே அதிகமாகச் சாகுபடி செய்யப்படுகிறது.
ஆத்தூர் சுற்றுவட்டார கிராமங்களான ராஜபதி, சொக்கப்பழக்கரை, மரந்தலை, வெள்ளக்கோவில், மேலஆத்தூர், ஆத்தூர், சேர்ந்தபூமங்கலம், வாழவல்லான், கொற்கை, உமரிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய தொழிலாக விவசாயிகள் வெற்றிலை பயிரிட்டு வருகின்றனர். வெற்றிலை கொடி வகை பயிர் என்பதால் இங்குள்ள கொடிக்கால்களில் தற்போது சுமார் 300 ஏக்கரில் வெற்றிலை விவசாயம் நடைபெறுகிறது.
தமிழகம் மட்டுமின்றி ஆக்ரா,டெல்லி, ஜெய்ப்பூர், இந்தூர், போபால், பெங்களூர், சித்தூர்உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் ஆத்தூர் வெற்றிலை அனுப்பி வைக்கப்படுகிறது. குட்கா, பான் பராக் போன்ற புகையிலை பொருட்களின் வருகை காரணமாக வெற்றிலை பயன்பாடு குறைந்ததால் கடந்த சில ஆண்டுகளாகவே ஆத்தூர் பகுதியில் வெற்றிலை விவசாயம் நலிவடைந்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் 600 ஏக்கரில் வெற்றிலை சாகுபடி நடைபெற்று வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா ஊரடங்கால் வெற்றிலை விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.
இது குறித்து ஆத்தூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்க தலைவரும், மேல ஆத்தூர் ஊராட்சித் தலைவருமான பி.சதீஷ்குமார் கூறியதாவது:
ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெற்றிலைவிவசாயத்தை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 10,000 பேர் உள்ளனர்.
வெற்றிலை பணப்பயிர் என்பதால் அரசு சார்பில் மானியம், கடனுதவி போன்ற எந்த சலுகைகளும் கிடைப்பதில்லை. இதனால் பலவிவசாயிகள் வெற்றிலை சாகுபடியை கைவிட்டு வருகின்றனர்.
விலை வீழ்ச்சி
கரோனா ஊரடங்கால் கோயில் விழாக்கள், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு தடை மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக வெற்றிலை பயன்பாடு பல மடங்கு குறைந்துள்ளது.
ஆத்தூர் பகுதியில் இருந்து தினமும் 5 முதல் 6 டன் வெற்றிலை பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் தற்போது பேருந்து போக்குவரத்து இல்லாததால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு வெற்றிலை அனுப்புவது பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் சுமார் 500 கிலோ வெற்றிலை மட்டுமே அனுப்பப்படுகிறது.
பல விவசாயிகள் வெற்றிலையை பறிக்காமல் அப்படியே கொடிகளில் விட்டுவிடுகின்றனர். அருகில் உள்ள மாவட்டங்களுக்கு மட்டும் குறைந்த விலைக்கு வெற்றிலை அனுப்பப்படுகிறது. கரோனா ஊரடங்குக்கு முன்பு ஒரு கிலோ வெற்றிலை ரூ.200 வரை விலை போனது. தற்போது ரூ.80 முதல் ரூ.100 வரை தான் விலை போகிறது. கரோனா தடுப்பு மருந்தில் கூட வெற்றிலையின் பங்கு முக்கியமானது. ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.