கோவையில் கரோனா பரிசோதனை முடிவுகள் தாமதமாக தெரிவிக்கப் படுவதால் தொற்று உள்ளவர்களுக்கு பாதிப்பு அதிகமாவதாக சமூக செயல்பாட்டாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலில் கடந்த இரு வாரங்க ளுக்கு மேலாக கோவை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

மாவட்டத்தில் மாநகராட்சி மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இப்பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்துக்குள் தொடர்புடைய வர்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு பரவலாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கோவை சமூக செயல்பாட்டாளர்கள் சிலர்கூறும்போது, ‘‘கரோனா பரிசோதனைமுடிவுகளை 24 மணி நேரத்துக்குள் வெளியிட அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், மாவட்டத்தில் சில இடங்களைத் தவிர, மற்ற இடங்களில் 2 முதல் 4 நாட்களுக்கு பின்னரே முடிவுகள் தெரிவிக்கப்படுகின்றன. தாமதமாக முடிவுகள் தெரிவிக்கப்படுவதால், பரிசோதனை செய்தவர்களில் தொற்று உள்ளவர்கள் அது தெரியாமல் வெளியே சுற்றுகின்றனர். அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு தொற்று பரவுகிறது.

தவிர, தாமதமாக முடிவு தெரிவிப்பதால், வயதானவர்கள் கரோனா தொற்று தீவிரமடைந்து பாதிக்கப்படுகின்றனர். மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் மருத்துவ முகாம்களில் சேகரிக்கப்படும், மாதிரிகளுக்கு முடிவுகள் தாமதமாகவே தெரிவிக்கப்படுகின்றன. சில சமயம், 24 மணி நேரத்தில் முடிவு வெளியிட்டதாக கணக்கு காட்ட, பரிசோதனை எடுத்த தேதியையும் மாற்றுகின்றனர். மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 552 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் குறிப்பாக கடந்த 9-ம் தேதி கணக்கின்படி மட்டும் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபோல் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க பரிசோதனை முடிவுகள் தாமதமாக தெரிவிக்கப்படுவது ஒரு முக்கிய காரணமாகும். முடிவுகளை விரைவாக தெரிவிக்க வேண்டும்,’’ என்றனர்.

மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘மாவட்டத்தில் தினமும் சராசரியாக 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நேற்று மதியம் நிலவரப்படி 15.49 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் முடிவுகளை விரைவாக தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’’ என்றனர்.

மாநகராட்சி நகர்நலத்துறை அதிகாரி கூறும்போது, ‘‘கரோனா பரிசோதனை முடிவுகள் விரைவாக வெளியிடப்படுகின்றன.

உதாரணத்துக்கு இன்று இரவு மாதிரி சேகரித்தால், நாளை மறுநாள் காலைக்குள் முடிவுகள் தெரிவிக்கப்படுகின்றன. அதேபோல், ஒருவர் கரோனா பரிசோதனை மேற்கொண்ட தேதியை மாற்றி முடிவு தெரிவிப்பதில்லை. ஒருவேளை பதிவேற்றம் செய்யும்போது செயலியின் தாமதத்தால் தேதி மாறியிருக்கலாம்,’’ என்றார்.

மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் கூறும்போது, ‘‘மாநகரில் கரோனா பரவல் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கரோனா பரிசோதனை முடிவுகளை விரைவாக தொடர்புடை யவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது,’’ என்றார்.