கல்வி நிலையங்கள் திறக்கும் வரை மாணவர்களுக்குத் தமிழக அரசு 2 ஜிபி இலவச டேட்டா வழங்க வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக, கடந்த ஓராண்டுக்கும் மேலாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும்பாலும் ஆன்லைன் வழியாகவே கல்வி பயின்று வருகின்றனர். ஆனால், ஆன்லைன் வகுப்புகளுக்குத் தேவையான செல்போன், இணைய வசதி உள்ளிட்டவை இல்லாமல், கிராமப்புற, விளிம்புநிலை மாணவர்கள் கல்வியைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வதற்கு ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஜன. 2021 முதல் ஏப். 2021 வரை கடந்த அதிமுக ஆட்சியில் 2 ஜிபி டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

எல்காட் நிறுவனத்தின் மூலம் விலையில்லா டேட்டா கார்டு வழங்கப்படும் என்றும், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த திட்டம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கமல்ஹாசன் இன்று (ஜூன் 24) தன் ட்விட்டர் பக்கத்தில், “வகுப்புகள் இணைய வழியிலே நடக்கும் சூழல் இருப்பதால், 2 ஜிபி இலவச டேட்டா திட்டம் செயல்படுத்த வேண்டும் எனும் மாணவர்களின் கோரிக்கை நியாயமானது. கல்வி நிலையங்கள் திறக்கும் வரை தமிழக அரசு இலவச டேட்டா வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.0