ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவின் வரைப்படத்தில், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகள் தனி நாடுகளாக காட்டப்பட்டதையடுத்து ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குனர் மனிஷ் மகேஷ்வரியின் மீது உத்தர பிரதேச போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மத்திய அரசு முன்பே அறிவித்த புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதற்கு ட்விட்டர் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் புதிய விதிகளின் படி இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி கெடு வழங்கியது.

இதனைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் பெற்றுள்ள சட்டபாதுகாப்பு அந்தஸ்து விலகிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியோரின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்குகளில், புளூ டிக் வசதியை நீக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதுபோலவே மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஒரு மணி நேரத்திற்கு ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. இந்தநிலையில் ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவின் வரைப்படத்தில் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகள் தனி பகுதிகளாக காட்டப்பட்டு இருந்தன.

இது ட்விட்ரில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ட்விட்டர் நிறுவனத்தின் இந்தச் செயலுக்கு எதிராகப் பலரும் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவிட்டனர். இதையடுத்து சர்ச்சைக்குரிய வரைபடத்தை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது.

இதனைத் தொடர்ந்து ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குனர் மனிஷ் மகேஷ்வரியின் மீது இந்தியாவின் தவறான வரைபடத்தை தனது இணையதளத்தில் காட்டியதாக உத்தரப்பிரதேசத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பஜ்ரங்தள நிர்வாகி அளித்த புகாரின் பேரில் புலந்த்ஷாஹர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.