முதல்வர் பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், 9 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கி, தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (பி. 13) வெளியிட்ட செய்தி வெளியீடு:

“விவசாயிகள், பல்வேறு விவசாய சங்கங்கள், சாகுபடி பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பெருத்த சேதத்தைக் கருத்தில் கொண்டு, நிலுவையில் உள்ள பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர்.

முதல்வர் 5.2.2021 அன்று சட்டப்பேரவை விதி எண். 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்புக்கிணங்க பயிர்க்கடன் தள்ளுபடி செய்து 8.2.2021 அன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் அரசாணைகள் வெளியிடப்பட்டன.

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்று 31.1.2021 அன்று நிலுவையில் உள்ள 16 லட்சத்து 43 ஆயிரத்து 347 விவசாயிகளின் 12 ஆயிரத்து 110.74 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், முதல்வர் இன்று 9 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ்களை வழங்கி, தொடங்கி வைத்தார்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது