கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையிலிருந்தே கேரளம் இன்னமும் விடுபடாத நிலையில், அங்கு பரவிவரும் ஜிகா வைரஸ் கேரள அரசின் சுகாதாரத் துறைக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இது தமிழ்நாட்டுக்கும் ஓர் எச்சரிக்கை சமிக்ஞையை விடுத்திருக்கிறது. தமிழ்நாட்டைப் போலவே கேரளத்திலும் கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை, கடந்த சில மாதங்களாக வெகுவாகக் குறைந்துவந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக நிலைமை மீண்டும் மோசமடையத் தொடங்கியிருக்கிறது. பரிசோதனை செய்துகொள்ளும் 100 பேரில் சராசரியாக 11 பேருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்படுகிறது. இதனால் அங்கு பொதுமுடக்கத் தளர்வுகள் குறைத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவின் முதல் கரோனா நோயாளியான கேரள மாணவிக்கு மீண்டும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதும் பேசுபொருளாகியிருக்கிறது.

முதல் நோயாளி

கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில், ஜூலை 8 அன்று 24 வயதுக் கர்ப்பிணி ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. முதன்முதலில் கர்ப்பிணிப் பெண்ணிடம் ஜிகா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதால், இது கர்ப்பிணிகளை அதிகம் தாக்குவதாகவே கருதப்பட்டது. ஆனால், மூன்று வயதுக் குழந்தை முதல் 73 வயதுப் பெண் என இதுவரை கேரளத்தில் 20-க்கும் அதிகமானோர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிகா வைரஸ் அதிகாலை அல்லது மாலையில் வலம்வரும் ஏடிஸ் எஜிப்தி கொசுக்கள் கடிப்பதால் வருகிறது. இதே ஏடிஸ் கொசுக்கள்தான் டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களையும் உருவாக்குகின்றன. “பொதுவாக, தேங்கி நிற்கும் நன்னீரில்தான் ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும். எனவே, பாத்திரம், பழைய டயர் என எங்கும் நன்னீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், முட்டையாக இருக்கும்போதே கொசுக்களை அழித்துவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளோம்” என்கிறார் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்.

ஒரு மனிதரின் உடலுக்குள் ஜிகா வைரஸ் வந்துவிட்டால் அதிகபட்சம் இரண்டு வாரங்கள் மட்டுமே ஆற்றலுடன் இருக்கும். சிலருக்கு இரண்டாவது நாளிலேயே அறிகுறிகள் தென்பட்டுவிடும். அதிகபட்சம் ஏழு நாட்களுக்குள் அறிகுறிகள் வெளிப்படும். பாதிக்கப்பட்டவர்கள் உடலில் தடிப்புகள், காய்ச்சல், உடல்வலி, தலைவலி, மூட்டுக்களில் வலி, உடல்சோர்வு ஆகியவற்றை உணர்வதாகச் சொல்கிறார்கள். இதில் உடல் தடிப்பு போக, பிற அறிகுறிகள் கரோனாவோடு ஒத்துப்போவதால் நோய்த் தொற்றாளர், தான் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறோமா அல்லது ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறோமா எனத் தடுமாறுவது உண்டு.

ஆபத்து அதிகம் இல்லை

அதேநேரம், கரோனா வைரஸ் தொற்றிலிருந்து ஜிகா வைரஸ் அடிப்படைக் குணநலன்களில் முற்றாக மாறுபட்டது. அதை மாநில சுகாதாரத் துறை கையாள்வதும் கரோனாவைவிட எளிதானதுதான் என்கிறார்கள். இதுகுறித்து கேரள சுகாதாரத் துறையின் மருத்துவ நிபுணர் மேத்யூ வர்கீஸ் கூறும்போது, “ஜிகா வைரஸுக்கு இதுவரை தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், இதுகுறித்துப் பெரிதாக அச்சம் கொள்ளத் தேவையில்லை. கரோனாவைப் போல் தொற்றுக்குள்ளானவரைத் தொடுவதால் ஜிகா வைரஸ் பரவாது… காற்றிலும் பரவாது. கொசுக்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வதன் மூலமே ஜிகா வைரஸிடமிருந்து தப்ப முடியும்” என்றார்.

ஜிகா வைரஸ் உயிர்க்கொல்லி நோய் அல்ல… கரோனா அளவுக்கு அதைப் பார்த்து அச்சப்படத் தேவையில்லை. அதேசமயம், முறையாகப் பரிசோதிக்காமல் ரத்ததானம் செய்தாலோ, பாலியல் உறவின் மூலமோகூட அது எளிதாகப் பரவிவிடும் என்கிறார்கள் வல்லுநர்கள். அதன் பரவுதல் வேகம் மிகக் குறைவு என்பது ஒரே ஆறுதல்.

கர்ப்பிணிகளுக்குக் கூடுதல் கவனம்

கர்ப்பிணிகள்தான் ஜிகா வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதில்லை. அதேநேரம், ஜிகா வைரஸ் பாதிப்பால் கர்ப்பிணிகளின் கருவில் இருக்கும் சிசுவுக்குப் பேராபத்தாக முடியும் எனும் எச்சரிக்கைகள் தொடர்ந்து மருத்துவர்கள் தரப்பிலிருந்து முன்வைக்கப்படுகின்றன. ஜிகா வைரஸானது சிசுவுக்குள் மரபணுக் குறைபாட்டை ஏற்படுத்தவோ, மூளையின் வளர்ச்சியைச் சிதைத்துவிடவோ சாத்தியம் உண்டு. சில நேரம் வயிற்றுக்குள் இருக்கும் சிசுவையே அழித்துவிடும் என்பதால், கர்ப்பிணிகள் தங்களைத் தற்காத்துக்கொள்வது இப்போது அவசியமாக இருக்கிறது.

“காய்ச்சல், உடல்வலி உள்ளிட்ட பிரதான அறிகுறிகள் தென்படும் கர்ப்பிணிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்” எனக் கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து, ஆரம்ப சுகாதார நிலையங்கள் அந்தப் பணியில் வேகம் காட்டிவருகின்றன. கர்ப்பிணிகளின் இல்லங்களுக்கே சென்று கண்காணிக்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. மத்திய சுகாதார அமைச்சகமும் ஆறு பேர் கொண்ட வல்லுநர் குழுவைக் கேரளத்துக்கு அனுப்பிவைத்துள்ளது.

பரிசோதனைகள்

ஜிகா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளோடு இருப்பவர்களின் மாதிரிகளைச் சேகரித்து, புனேயில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகம், தமிழகத்தின் கோவையில் உள்ள ஆய்வகம், ஆலப்புழாவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் ஆகிய இடங்களுக்குப் பரிசோதனைக்கு அனுப்பி முடிவை விரைந்து பெறுகிறது கேரள சுகாதாரத் துறை. திருவனந்தபுரம், திருச்சூர், கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், ஆலப்புழாவில் உள்ள வைராலஜி நிறுவனத்திலும் ஜிகா வைரஸ் தாக்குதலைப் பரிசோதிக்கும் 2,100 கருவிகளைத் தயார் நிலையில் வைத்திருக்கிறது அம்மாநில அரசு. பல அரசு மருத்துவமனைகளில் ஜிகா வார்டும் அமைக்கப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் பாதிப்புக்கு மருந்து எதுவும் இல்லாத நிலையில் பூரண ஓய்வும், திரவ உணவுகளுமே சிகிச்சையில் இருப்போருக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன.

கரோனாவைப் போல் இது வீரியமாகப் பரவாததாலும், கொசு கடிப்பதால் மட்டுமே பரவுவதாலும் கேரளத்தில் நிலைமை இப்போதைக்குக் கட்டுக்குள் இருக்கிறது. இரு ஆண்டுகளுக்கு முன்பு கேரளத்தில் தலைதூக்கிய நிபா வைரஸின்போது எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இப்போதும் பின்பற்றப்படுகின்றன.

தமிழ்நாட்டிலும் எச்சரிக்கை அவசியம்

ஜிகா வைரஸ் கேரளத்துக்குத்தான் புதிது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2017-லேயே தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உள்ள என்.புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 27 வயது நபருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதே ஆண்டில் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களிலும் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டது. கேரளத்தில் முதன்முதலில் ஜிகா வைரஸ் தொற்றுக்குள்ளான கர்ப்பிணி, குமரி மாவட்டத்தின் எல்லையோரப் பகுதியைச் சேர்ந்தவர்தான். இந்நிலையில், அண்டை மாநிலமான கேரளத்தில் பரவிவரும் ஜிகா வைரஸ் குறித்த விழிப்புணர்வும், தடுப்பு நடவடிக்கைகளும் தமிழ்நாட்டுக்கும் இப்போது மிக மிக அவசியம்!

#MetroPeople #News #Kerala #ZikaVirus #virus #NewsUpdates #Tamilnadu #Mkstalin