கேரளாவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாநில எல்லையான தேனி மாவட்டத்தின் 3 வழித்தடங் களில் அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கேரளாவில் சில வாரங்களாக கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. மற்ற மாநிலங்களை விட, கரோனாவின் தாக்கம் கேரளாவில் மிக அதிகமாக உள்ளதால் மத்திய அரசின் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் சார்பில் 6 நிபுணர்கள் கொண்ட சிறப்புக்குழு விரைவில் ஆய்வு நடத்துகிறது.

இந்நிலையில், அருகே தேனி மாவட்டம் அமைந்துள்ளதால் மாவட்ட நிர்வாகம் முன்னெச் சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக குமுளி, கம்பம் மெட்டு, போடிமெட்டு வழித் தடங்களில் சுகாதாரம், வருவாய், காவல் துறையினர் இணைந்து சோதனை நடத்துகின்றனர்.

கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் ‘மாலத்தியான்’ எனும் மருந்து தெளித்த பிறகே தமிழக பகுதிகளுக்குள் அனுப்பப்படுகி ன்றன. இதே போல் தமிழகம் வரும் பொதுமக்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு அவர்களின் மொபைல் எண்கள் பதிவு செய்யப்படுகின்றன.

இதுகுறித்து கூடலூர் நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், கேரளாவில் கரோனா மற்றும் ஜிகா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. ஆகவே காவல், சுகாதாரம், நகராட்சி என தனித்தனி குழுக்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.

இருப்பினும் இ-பாஸ் இன்றி பலரும் தமிழகத்துக்கு வருவது தொடர்கிறது. கேரளாவை ஒப்பிடு கையில், தமிழக எல்லையில் கண்காணிப்பு குறைவாகவே உள்ளதாக புகார் எழுந்துள்ளது.