ருச்சி மாவட்டத்தில் கொடிங்கால் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காவிரி டெல்டா பகுதியில் நீர்நிலைகள் தூர்வாரும் பணிக்காகத் திருச்சி மண்டலத்தில் 589 பணிகளுக்கு ரூ.62.905 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் 58 பணிகளுக்கு ரூ.2.2 கோடிக்கும் தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள காவிரி டெல்டா பகுதியில் உள்ள ஆறுகள், ஓடைகள், வாய்க்கால்கள், பிரிவு வாய்க்கால்களில் உள்ள முட்செடிகளை அகற்றி தூர்வாருவதன் மூலம் பாசனத்துக்குக் கடைமடை வரை தண்ணீர் எளிதாகச் சென்று சேரும்.
இந்தத் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் அரியாறு வடிநிலக் கோட்டத்தில் 43 பணிகள் 97.70 கி.மீ. தொலைவுக்கு ரூ.3.85 கோடியிலும், திருச்சி ஆற்றுப் பாதுகாப்புக் கோட்டத்தில் 20 பணிகள் 65.11 கி.மீ. தொலைவுக்கு ரூ.1.773 கோடியிலும் என, மொத்தம் 63 பணிகள் மொத்தம் 162.81 கி.மீ. தொலைவுக்கு ரூ.5.623 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கொடியாலம் ஊராட்சி புலிவலம் கிராமத்தில் இருந்து செல்லும் கொடிங்கால் வடிகால் தூர்ந்து, மண்மேடுகள் உருவாகி, செடி- கொடிகள் வளர்ந்து நீரோட்டத்துக்கு தடையாக இருப்பதால், அந்த வாய்க்காலைத் தூர் வார வேண்டும் என்று, உய்யக்கொண்டான் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதை ஏற்று, புலிவலம் மணற்போக்கி தொடங்கி கொடிங்கால் வாய்க்காலில் 1,100 மீ. தொலைவுக்கு தூர்வாரும் பணிகள் ரூ.29.70 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு, நிறைவடையும் நிலையில் உள்ளன.
இந்தப் பணிகளை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 11) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாநில அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அ.சவுந்தரபாண்டியன், எஸ்.ஸ்டாலின் குமார், எம்.பழனியாண்டி, எஸ். இனிகோ இருதயராஜ், சீ.கதிரவன் மற்றும் நீர்வள ஆதாரத் துறையின் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி, நடுக் காவிரி வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளர் ஆர்.திருவேட்டைசெல்லம், திருச்சி ஆற்றுப் பாதுகாப்புக் கோட்டச் செயற்பொறியாளர் ஆர்.மணிமோகன், முக்கொம்பு உதவிப் பொறியாளர் எஸ்.ராஜரத்தினம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்