கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட இந்தியர்கள் பலர் ஐரோப்பிய யூனியனுக்கு பயணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ள விவகாரத்தை உயர் மட்ட அளவில் எடுத்துச் செல்வேன் என சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் மக்கள் எளிதாக பயணம் மேற்கொள்ள கிரீன் பாஸ் என்ற நடைமுறையை செயல்படுத்தபடுகிறது. கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் அதற்கான கிரீன் பாஸ் சான்றிதழ் உடன் ஸ்பெயினில் இருந்து பிரான்ஸ், பிரான்ஸில் இருந்து இத்தாலி என சுலபமாக சென்று வரலாம்.

இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் வேக்ஸேவ்ரியா, அமெரிக்காவின் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்டு ஜான்சன் ஆகிய நான்கு தடுப்பூசிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஐரோப்பிய மருந்துகள் அமைப்பு இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு கிரீன் பாஸ் அங்கீகாரம் வழங்கவில்லை.

இதனால் சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியா தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் கோவிஷீல்ட் தடுப்பூசியை போட்டுக் கொண்டால் அவர்கள் ஐரோப்பாவில் பயணம் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது.

ஆதார் பூனாவாலா

இதுகுறித்து சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட இந்தியர்கள் பலர் ஐரோப்பிய யூனியனுக்கு பயணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதை நான் உணர்கிறேன். நான் உங்களுக்கு ஒரு உறுதியளிக்கிறேன். இந்த விவகாரத்தை உயர் மட்ட அளவில் எடுத்துச் செல்வேன். இந்த விவகாரம் விரைவில் தீர்க்கப்படும் என நம்புகிறேன். இதற்கான தீர்வு பெற ஒழுங்குமுறை அமைப்பு அளவிலும் சம்பந்தப்பட்ட நாடுகளின் ராஜதந்திர அளவில் கொண்டு செல்லப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.