தமிழகத்தின் 30-வது சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள சைலேந்திர பாபு சட்டம்- ஒழுங்கில் நீண்ட கால அனுபவம் பெற்றவர். எந்தவித சர்ச்சையிலும் சிக்காத அதிகாரி. விளையாட்டுத் துறையில் மிகுந்த ஆர்வம் உள்ள அதிகாரி ஆவார்.

அடுத்த சட்டம்-ஒழுங்கு டிஜிபிக்கான வாய்ப்பு உள்ளோர் பட்டியலில் இருந்த சைலேந்திர பாபு, ஷகில் அக்தர், கந்தசாமி, சுனில் குமார் சிங் ஆகியோர் போட்டியில் இருந்த நிலையில் சைலேந்திர பாபு இறுதியாகத் தேர்வாகியுள்ளார்.

அவரைப் பற்றிய சிறு குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 1962ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி பிறந்தவர் சைலேந்திர பாபு. இவரது தந்தை இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். குழித்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பு முடித்தார். மதுரை விவசாயப் பல்கலைக்கழகத்தில், விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

கோயம்புத்தூர் விவசாயப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொதுச் சட்டம் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மக்கள் தொகை கல்வியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் “Missing Children” என்கிற ஆய்வறிக்கைக்காக பிஎச்டி பட்டம் பெற்றார். 2013ஆம் ஆண்டில் மனிதவள வணிக நிர்வாக படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றார். இவர் 1987ஆம் ஆண்டு தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வானார். முதன்முதலில் தருமபுரி மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளராகக் காவல் பணியைத் தொடங்கினார்.

பின்னர் கோபிச்செட்டிப்பாளையம், சேலம், திண்டுக்கல், செங்கல்பட்டு, சிவகங்கை, கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். சென்னை காவல் ஆணையரகத்தின் கீழ் அடையாறு துணை ஆணையராகப் பணியாற்றினார்.

2001ஆம் ஆண்டு டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்றபின் விழுப்புரம் சரக டிஐஜியாகப் பணியாற்றினார். முத்துக்கருப்பன் காவல் ஆணையராக இருந்தபோது சென்னையைக் கலக்கிய 3 இணை ஆணையர்களில் ஒருவராக 2001 முதல் 2005 வரை வடக்கு மண்டல இணை ஆணையராகவும், பின்னர் தெற்கு மண்டல இணை ஆணையராக 2005 முதல் 2006 வரையிலும், பின்னர் திருச்சி சரக டிஐஜி ஆக 2006ஆம் ஆண்டில் 3 மாதமும் பொறுப்பு வகித்துள்ளார்.

தமிழ்நாடு காகித ஆலை டிஐஜியாக 2006 முதல் 6 மாதம் பணியாற்றிய நிலையில் ஐஜியாகப் பதவி உயர்வு பெற்றார். பின்னர் அதே பணியில் நீடித்த அவர் 2008ஆம் ஆண்டு சிறப்பு அதிரடிப் படை ஐஜியாக நியமிக்கப்பட்டார். 2010ஆம் ஆண்டு கோவை நகரக் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். 2011ஆம் ஆண்டு வடக்கு மண்டல ஐஜி ஆக நியமிக்கப்பட்டார்.

2012ஆம் ஆண்டு ஏடிஜிபியாகப் பதவி உயர்வு பெற்ற நிலையில் கடலோரக் காவல் குழும ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டார். இடையில் 2016ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டு 25 நாட்களில் மீண்டும் கடலோரக் காவல் குழும ஏடிஜிபியாக மாற்றப்பட்டார். அங்கு பணியாற்றிய நிலையில் 2017 ஜூன் மாதம் சிறைத்துறை ஏடிஜிபியாக மாற்றப்பட்டார்.

அதே ஆண்டு அக்டோபர் மாதம் ரயில்வே ஏடிஜிபியாக மாற்றப்பட்டார். 2019ஆம் ஆண்டு டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்றார். ரயில்வே டிஜிபியாகத் தொடர்ந்தார். இடையில் அவருக்கு தீயணைப்புத்துறை கூடுதல் பொறுப்பு ஒதுக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன் அது மற்றொரு டிஜிபிக்கு மாற்றப்பட்டது. சோதனையான, இக்கட்டான, மன உளைச்சல் மிக்க காலகட்டங்களைச் சந்தித்து தற்போது காவல்துறையின் உயரிய பதவியான சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது பணிக்காலத்தில் டெல்லியில் அயல் பணியில் சிபிஐ, ரா, சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப் என ஏதாவது ஒரு பணிக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றல் வாங்கி அங்கு சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு வருவார்கள். ஆனால், அயல் பணியில் செல்லாத, முழுவதும் தமிழக அரசுப் பணியிலேயே பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி இவர். அயல் பணியில் பணியாற்றாமல் பதவிக்கு வந்த 2-வது டிஜிபி இவர். அடுத்த 2 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத பதவி இது.

ரயில்வே டிஜிபியாகப் பணியாற்றியபோது, பல்வேறு துறை சார்ந்த சீர்திருத்தங்களில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

உடற்பயிற்சி, நீச்சல், சைக்கிளிங், மார்ஷியல் ஆர்ட்ஸ், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட போட்டிகளில் ஆர்வம் மிக்கவர். உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பவர். 59 வயதான நிலையிலும் லிஃப்ட்டை உபயோகப்படுத்தாமல் இன்றும் வேகமாக மாடிப்படிகளில் வேகமாக ஏறிச் செல்லும் அளவுக்கு எனர்ஜி உள்ளவர்.

விளையாட்டுத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் சைலேந்திர பாபு. 2002ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டி, 2003ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற உலக தடகளப் போட்டி, 2007ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற உலக தடகளப் போட்டிகளில் அங்கம் வகித்தார்.

மேலும், பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய தடகள வீரர்களுக்குக் கண்காணிப்பாளராகவும் இவர் நியமிக்கப்பட்டார். புத்தக வாசிப்பு, இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் சுயமுன்னேற்ற உரை இவரது சிறப்பு. சிவில் தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்காகப் பல சுய முன்னேற்ற துறைசார் அறிவுரைகளை வீடியோ வடிவில் வழங்கியுள்ளார். நீங்களும் ஐபிஎஸ் ஆகலாம், சாதிக்க ஆசைப்படு உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.

விளையாட்டில் தீவிர ஆர்வம் உள்ள இவர் சைக்கிளிங்கில் பெரும் ஆர்வம் கொண்டவர். 50 கி.மீ., 100 கி.மீ. என இவர் சைக்கிளிங் செய்வார். இளம் வயது காவலர்கள், சைக்கிளிங் ஆர்வம் உள்ளவர்களுடன் ஒரே நாளில் சைக்கிள் மூலம் புதுச்சேரி வரை சென்று திரும்புவது இவருக்குக் கைவந்த கலை. இதுதவிர சமூகம் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துபவர். பழக எளிமையானவர். இதுவரை காவல்துறையில் எந்த சர்ச்சையிலும் சிக்காதவர். சமூக வலைதளங்களில் பிரபலமான சில ஐபிஎஸ் அதிகாரிகளில் சைலேந்திர பாபு முன்னோடி எனச் சொல்லலாம்.

காவல்துறையில் சைலேந்திர பாபு ஆற்றிய பணிகளுக்காகக் குடியரசுத் தலைவர் விருது உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மெடல்கள் இவரது மார்பை அலங்கரித்தன. 2022ஆம் ஆண்டு ஓய்வு பெற உள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டதன் மூலம் அடுத்து வரும் 2 ஆண்டுகளுக்கு அதாவது ஜூன் 2023 வரை பதவியில் நீடிப்பார்.