மானியமில்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.25 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

14.2. கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் மானிய விலையில் ஆண்டுக்கு 12 எண்ணிக்கையில் வழங்கப்படுகிறது. அதற்கு அதிகமாகத் தேவைப்படும் பட்சத்தில் சந்தை விலைக்கு வாங்கிக்கொள்ளலாம்.
இதன்படி, சந்தையில் மானியமில்லாமல் விற்பனை செய்யப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை 25 ரூபாய் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் இன்று அறிவித்துள்ளன.

மும்பையில் சிலிண்டர் விலை ரூ.834.50ஆகவும், கொல்கத்தாவில் ரூ.835.50க்கும் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக சிலிண்டர் ஒன்றுக்கு விலை ரூ.25 உயர்ந்து, ரூ.850.50க்கு விற்பனையாகிறது.

ஹோட்டல்கள், தேநீர் கடைகளில் பயன்படுத்தப்படும் வர்த்தகரீதியான சிலிண்டர் விலை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.76 அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களி்ல் வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 140 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.25, பிப்ரவரி 15ம் தேதி ரூ.50, பிப்ரவரி 25-ம் தேதி மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதன்பின் மார்ச் 1-ம் தேதி ரூ.25 விலை ஏற்றப்பட்டது. பிப்ரவரி மாதத்தில் சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாயும், மார்சில் ரூ.25 என 125 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் ஏப்ரல் மாதம் சிலிண்டருக்கு 10 ரூபாய் குறைக்கப்பட்டது.

இந்நிலையில் மே, ஜூன் மாதம் எந்த விதமான மாற்றமும் செய்யாத நிலையில் ஜூலை மாதத்தில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா, டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களோடு ஒப்பிடுகையில், சென்னையில்தான் சிலிண்டர் விலை அதிகமாகும். 25 ரூபாய் ஏற்றப்பட்டு சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.850 ஆக அதிகரித்துள்ளது.