சர்வதேச ஒப்பந்தம் மூலம் தமிழகத்துக்கு என்னென்ன தடுப்பூசிகள் பெறப்படும் என்ற கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் 4 பேர் உயிரிழந்த நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மருத்துவமனையை ஆய்வு செய்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, ”தமிழகத்துக்கு ஒட்டுமொத்தமாகவே தடுப்பூசிகள் மத்திய அரசுத் தொகுப்பில் இருந்துதான் வந்தன.

தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனினும் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்துவதற்காக தமிழக அரசு 46 கோடி ரூபாயை முன்பணமாகச் செலுத்தியுள்ளது

இந்நிலையில் நாமே தடுப்பூசிகளை நேரடியாக கொள்முதல் செய்வதற்குத்தான் சர்வதேச ஒப்பந்தத்தைக் கோர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரப்படுகின்றன.

அதன் பிறகு கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் மற்றும் புதிதாக வரும் தடுப்பூசிகளைக் கூட நாமே கொள்முதல் செய்து, அனைத்து வயது மக்களுக்கும் போட வாய்ப்புக் கிடைக்கும்.

எவ்வளவுக்கு எவ்வளவு குறைந்த கால இடைவெளியில் பெற முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு சர்வதேச ஒப்பந்தம் கோரப்பட்டு தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்படும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.