தருமபுரி மாவட்டம் ஏரியூர் அடுத்த அண்ணா நகர் பகுதியில் சாலை வசதியின்றி தவித்த மாற்றுத் திறனாளி. அடுத்த படம்: அவரது ட்விட்டர் கோரிக்கையை ஏற்று மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணி.

தருமபுரி

தருமபுரி மாவட்டம் பென்னா கரம் வட்டம் ஏரியூரில் மாற்றுத் திறனாளியின் கோரிக்கையை ஏற்று சாலை அமைக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கினர்.

பென்னாகரம் வட்டம் ஏரியூர் ஒன்றியத்தில் சிறுசிறு மலைக் கிராமங்கள் ஏராளமாக உள்ளன. ஏரியூர் அடுத்த அண்ணா நகர் பகுதியும் அவற்றில் ஒன்று. இங்கு வசிப்பவர் மூர்த்தி. மாற்றுத் திறன் கொண்ட தையல் தொழிலாளியான இவர் ஏரியூரில் தையல் கடை நடத்துகிறார். அப்பகுதியில் உள்ள பிரதான பாதையில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சென்றால் தான் மூர்த்தி அவரது வீட்டை அடைய முடியும்.

இரு கால்களும் செயல்பட முடியாத அளவு மாற்றுத் திறன் கொண்டவர் என்பதால் பிரத்தியேக இருசக்கர வாகனத்தின் மூலமோ அல்லது தரையில் தவழ்ந்தோ தான் மூர்த்தியால் இடம்பெயர்ந்து செல்ல முடியும். பிரதான சாலையில் இருந்து மூர்த்தியின் வீடு உள்ள பகுதி நோக்கி செல்லும் மண் சாலை தாழ்வான இடத்தில் இருந்து மேட்டுப்பாங்கான இடத்தை நோக்கியபடி அமைந்துள்ளது.

மிகவும் சறுக்கல் நிறைந்த மற்றும் கற்கள் பெயர்ந்து கிடக்கும் அந்த சாலையில் அவரால் தனக்கான பிரத்தியேக இருசக்கர வாகனத்தை இயக்கிச் செல்ல முடிவதில்லை.

எனவே, வீட்டில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை தவழ்ந்து சென்ற பிறகே தனது இருசக்கர வாகனம் மூலம் வெளியிடங்களுக்கு அவரால் சென்று வர முடிகிறது. தன் சிரமங்களை போக்கவும், இப்பகுதியில் ஆங்காங்கே வசிக்கும் குடியிருப்பு வாசிகளின் வசதிக்காகவும் இப்பகுதி சாலையை சீரமைத்துத் தர வேண்டுமென அதிகாரிகளுக்கு அவர் பலமுறை மனுக்களை அனுப்பியுள்ளார். தீர்வு கிடைக்காதபோதும் தன் முயற்சிகளில் இருந்து அவர் பின்வாங்கவில்லை.

அண்மையில், தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கான ட்விட்டர் கணக்குக்கு இதுகுறித்த கோரிக்கையை அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது அப்பகுதியில் மண் பரப்பு சீரமைக்கப்பட்டு சாலை அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. எனவே, மூர்த்தியும், அப்பகுதி மக்களும் மாவட்ட நிர்வாகத்துக்கு நெகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினியிடம் கேட்டபோது, ‘தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியத்தில் இருந்து மூர்த்தி என்பவர் மாவட்ட நிர்வாகத்துக்கான ட்விட்டர் கணக்குக்கு சாலை வசதி கேட்டு மனு ஒன்றை அனுப்பி இருந்தார். மனுவில் இருந்த தகவலின்படி அந்த சாலைக்கான முக்கியத்துவத்தை நேரில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் உடனடியாக பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. ட்விட்டர் உட்பட எந்த வடிவிலான புகார் மனுக்களும் உடனடியாக விசாரிக்கப்பட்டு அதன் உண்மைத் தன்மைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கும் பணி தருமபுரி மாவட்டத்தில் தொடரும்’ என்றார்.