யூக்சோம்(சிக்கிம்): சிக்கிமில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது.

வட இந்திய மாநிலமான சிக்கிமில் இன்று அதிகாலை 4.18 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சிக்கிமின் யோக்சோம் நகருக்கு வடமேற்கே 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. தேசிய பூகம்ப ஆய்வு மையம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

இதேபோல், மற்றொரு நிலநடுக்கம் இன்று காலை 6.47 மணிக்கு ஆப்கனில் ஏற்பட்டுள்ளது. இதுவும் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. ஆப்கனின் ஃபைசாபாத் நகருக்கு தென்கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது பூமிக்கு அடியில் 135 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தேசிய பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவ்விரு நிலநடுக்கங்களாலும் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.