‘நவரசா’ ஆந்தாலஜியில் கெளதம் மேனன் இயக்கியுள்ள படத்துக்கு ‘கிடார் கம்பி மேலே நின்று’ எனத் தலைப்பிட்டுள்ளனர்.
கரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட பொருளாதார இழப்புக்கு உதவுவதற்காக ‘நவரசா’ ஆந்தாலஜி தயாராகி வருகிறது. இதில் அனைவருமே சம்பளமின்றிப் பணிபுரிந்து வருகிறார்கள். மணிரத்னம் மற்றும் ஜெயந்திரா தயாரித்து வரும் இந்த ஆந்தாலஜி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
‘நவரசா’ ஆந்தாலஜியில் 9 கதைகளை கெளதம் மேனன், பிஜோய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன், ரதிந்தீரன், அரவிந்த்சாமி, ப்ரியதர்ஷன், வஸந்த் உள்ளிட்டோர் இயக்கியுள்ளனர். ஆனால், இறுதியான இயக்குநர்கள் பட்டியல் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. முதலில் அறிவிக்கப்பட்ட பட்டியலுக்குப் பிறகு பல்வேறு இயக்குநர்கள் மாறியிருப்பது நினைவுகூரத்தக்கது.
இதில் சூர்யா, அரவிந்த்சாமி, சித்தார்த், பார்வதி, பிரசன்னா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா, அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யார், யார் எந்த இயக்குநரின் படத்தில் நடித்துள்ளார்கள் என்பது விரைவில் தெரியவரும்.
தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, பிரயாகா மார்ட்டின் உள்ளிட்டோர் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. இந்தக் கதைக்கு ‘கிடார் கம்பி மேலே நின்று’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 38 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தக் கதையில் 7 பாடல்கள் கொண்டதாக திரைக்கதை அமைத்துள்ளார் கெளதம் மேனன்.
ஆகஸ்ட் மாதத்தில் ‘நவரசா’ ஆந்தாலஜி வெளியாகவுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. தற்போது இதனை விளம்பரப்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளது படக்குழு.