சென்னையில் 2-வது நாளாக நேற்றும்கனமழை பெய்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலையில் மாநகரப் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இந்த மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி,புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, சோழவரம் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்த ஐந்து ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கனஅடி. நேற்றைய நிலவரப்படி ஏரிகளில் 7,096 மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது. கடந்தாண்டு இதே நாளில் 4,812 மில்லியன் கனஅடிமட்டுமே நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறும்போது, “தற்போது ஏரிகளில் 7 மாதங்களுக்குத் தேவையான குடிநீர் இருப்பு இருப்பதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 850 மில்லியன் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது” என்றனர்.