செய்யாததைச் செய்ததாகக் கூறி, தமிழக மக்களை முதல்வர் பழனிசாமி ஏமாற்றி வருகிறார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஊனையூரில் இன்று (பிப்.15) ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ எனும் பிரச்சாரத்தில் அவர் பேசியது:
”தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் பாதுகாப்பான குடிநீர்கூடக் கிடைக்கவில்லை. அனைவருக்கும் தடையின்றிப் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்காக இந்தியாவிலேயே தமிழகத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தைத் திமுகதான் கொண்டு வந்தது. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, ஊழலாட்சித் துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.
தமிழகத்தில் ஊழல் செய்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் முதல் ஊழல் பட்டியல் கொடுக்கப்பட்டது. அடுத்ததாக 2-வது பட்டியல் விரைவில் கொடுக்கப்படும். நடவடிக்கை எடுக்காவிட்டாலும், திமுக ஆட்சிக்கு வந்ததும் தற்போதைய அமைச்சர்கள் சிறையில்தான் இருப்பார்கள்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தமிழகத்தில் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பின்றிக் காத்துக்கொண்டு இருக்கின்றனர். மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று 7 வருடமாக வேலை வழங்கப்படவில்லை. 45 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே ஆசிரியர் தேர்வு எழுத முடியும் என்ற தமிழக அரசின் உத்தரவு திமுக ஆட்சியில் ரத்து செய்யப்படும்.
கரோனாவிலும் ஊழல் செய்தவர் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். இவர் மீது குட்கா ஊழல், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ரூ.89 கோடி பணப் பட்டுவாடா செய்தது போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தமிழகத்தில் கரோனாவால் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். பல்லாயிரக்கணக்கோனார் இறந்ததற்கும் விஜயபாஸ்கர்தான் காரணம். ஏனெனில், தொடக்கத்தில் கரோனா பாதிப்பு வராது என்று சட்டப்பேரவையில் கூறினார். மரணத்தில் பொய் சொன்னவர்தான் விஜயபாஸ்கர்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகளில் முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது ஊழல் வழக்கு குறித்து யோசித்தே 6 ஆண்டுகள் கழிந்தன. அவர் இறந்த பிறகு பதற்றமாகவே 4 ஆண்டுகள் கழிந்தனவே தவிர, மக்களைப் பற்றி இவர்கள் கவலைப்படவில்லை.
10 ஆண்டுகளில் புதிய வேலைவாய்ப்பு, புதிய முதலீடு, மாநில உரிமை, நீட் தேர்வில் விலக்கு குறித்துக் கவனம் செலுத்தாமல், பணம் கிடைக்கும் திட்டங்களை மட்டுமே அவர்கள் தீட்டியதால், ரூ.5 லட்சம் கோடி கடனில் தமிழகம் மூழ்கடிக்கப் பட்டுவிட்டது.
ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் கோரிக்கைகள் தீர்க்கப்படும். ஒரு வேளை அதன்பிறகும் தீர்க்கப்படவில்லை என்றால் கோரிக்கை மனு பதிவு செய்தபோது வழங்கப்பட்ட அட்டையோடு தலைமைச் செயலகத்துக்குள் எவ்வித அனுமதியையும் பெறாமல் முதல்வரையே சந்திக்கலாம். ஆகையால், இந்த அட்டையை வாங்கியவர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
இதைச் செய்யும்பட்சத்தில் 1 கோடி குடும்பங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு இருக்கும். கடந்த 1 மாதத்தில் 100 தொகுதிகளுக்குச் சென்றுள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்து ஏராளமானோர் மனு கொடுக்கிறார்கள். இதைப் பார்த்து தமிழக முதல்வர் பழனிசாமி, வயிற்றெரிச்சல்படுகிறார். மேலும், நான் மக்களிடம் காதுகுத்துவதாகவும் அவர் கூறி வருகிறார். அப்படியென்றால், 2011-ல் அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி 2-வது விவசாயப் புரட்சித் திட்டம் வந்ததா?.
வருமானம் 2 மடங்காக உயர்த்தப்படும், வேளாண் கருவிகள் இலவசமாக வழங்கப்படும், கரும்பு விலையைப் போன்று அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை கொடுக்கப்பட்டும் எனக் கூறியது வந்ததா? கரும்புக்கான நிலுவை தொகை கொடுக்கப்பட்டதா?.
அனைத்து விவசாயிகளுக்கும் சொட்டுநீர்ப் பாசனம் இலவசமாக அமைத்துக்கொடுக்கப்பட்டதா?. 2016 தேர்தல் அறிக்கையில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் செல்போன் இலவசமாக கொடுக்கப்பட்டதா?. கல்விக் கடன் ரத்து செய்யப்பட்டதா? இலவச லேப்டாப்புடன் நெட் கொடுக்கப்பட்டதா?. பொது இடங்களில் இலவச வைஃபை கொடுக்கப்பட்டதா?.
ரூ.25-க்கு 1 லிட்டர் பால் கொடுக்கப்பட்டதா?. இதெல்லாம் செய்யாமல் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவற்றி விட்டதாகத் தமிழக முதல்வர் பழனிசாமி கூறுகிறார். செய்யாததைச் செய்ததாகக் கூறி அவர்தான் காது குத்துகிறார்.
அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னால் இழுத்து செல்லப்பட்டுள்ளது. இந்திய அளவில் தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என்பதுதான் திமுகவின் இலக்கு. அது நிச்சயம் நிறைவேறும்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
முன்னதாக, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு துறைகளில் சாதித்த சாதனையாளர்கள் பாராட்டப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுவாசலில் எரிபொருள் சோதனைக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை உள்ளடக்கிய வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் திருமயம் எஸ்.ரகுபதி, ஆலங்குடி சிவ.வீ.மெய்யநாதன், புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு, வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.