தமிழகத்தில் ரூ.1,634 கோடியில் 18 அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை உதவியுடன் ரூ.141 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டுமானப் பணி குறித்து அமைச்சரிடம் பொதுப்பணித் துறை அதிகாரிகள் விளக்கினர்.

அதைத் தொடர்ந்து, கரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் சிகிச்சை முறைகள்குறித்து மருத்துவமனை டீன் ஆர்.சாந்திமலர் விளக்கிக் கூறினார்.

மருத்துவர்களுக்கு பாராட்டு

பின்னர், கருப்பு பூஞ்சை நோயில் இருந்து குணமடைந்தவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்த அமைச்சர், அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து குணப்படுத்திய மருத்துவர்களுக்கு பூங்கொத்து அளித்து பாராட்டினார்.

தொடர்ந்து, கெரிடாஸ் இந்தியாநிறுவனம் சார்பில் 25 ஆக்சிஜன்செறிவூட்டிகள், முகக் கவசங்கள், மருத்துவ உபகரணங்கள் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, அண்ணாநகர் எம்எல்ஏ மோகன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

ஜப்பான் நிதியுதவி

ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவுமுகமை நிதியுதவியுடன் தமிழகத்தில் 3 பெரிய மருத்துவமனைகளில் பெரிய கட்டிடங்கள் உருவாக்கப்படுவதுடன், 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை மேம்படுத்தவும், 11 மாவட்ட அரசுமருத்துவமனைகளை மேம்படுத்தவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.1.634 கோடியாகும்.

வடசென்னை மக்களுக்கு மிகவும் பயன் அளிக்கும் திட்டமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பன்னோக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு கட்டிடங்கள் கட்டுவதற்காக ரூ.141 கோடி மற்றும் மருத்துவ உபகரணங்களுக்காக ரூ.134 கோடிஎன மொத்தம் ரூ.275 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்பணிகள் அடுத்த ஆண்டுஆகஸ்ட் மாதத்தில் முடிவடையும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here