தமிழக அரசின் உத்தரவுப்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பு நாளை மறுதினம் முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகம் முழுவதும் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, நாளை மறுதினம் (மே.16) முதல் விலை குறைப்பு அமலுக்கு வருகிறது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு ஒன்றியத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 1.35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

இதில் சுமார் 60 ஆயிரம் லிட்டர் பால், பாக்கெட்டுகளாகவும் மீதம் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மீதம் உள்ளவை சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

தமிழக அரசின் ஆவின் பால் புதிய விலை குறைப்பு அறிவிப்பின்படி வேலூர் ஆவினில் இருந்து சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ஒன்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை ரூ.43-ல் இருந்து ரூ.40 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு ரூ.47-ல் இருந்து ரூ.44 ஆகவும், நிறை கொழுப்பு பால் லிட்டர் ரூ.51-ல் இருந்து ரூ.48 ஆகவும் குறைக்கப்படுகிறது.

இந்த புதிய விலை குறைப்பின்படி பொதுமக்கள் ஆவின் பாலை வாங்கித் தமிழக அரசுக்கும் ஆவின் நிறுவனத்துக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று வேலூர் ஆவின் பொது மேலாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.