தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழக சட்டப்பேரவை ஜூன் 21 அன்று, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த 2 தினங்களாக நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

இந்த விவாதங்களில், பல்வேறு கட்சிகளைச் சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினர். அதற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.

இந்நிலையில், சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்றுடன் (ஜூன் 24) நிறைவடையும் நிலையில், கடைசி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் உரை ஆற்றுகிறார். இது தவிர, அரசுத்துறையின் செலவினங்களை ஆய்வு செய்து மத்திய அரசின் தணிக்கைத் துறை அளித்த அறிக்கையும் சட்டப்பேரவையில் தாக்கலாக உள்ளது.