தமிழக பாஜகவின் தலைவர் எனும் பொறுப்பு பணிவும், பெருமையும் கொள்ளச் செய்கிறது என, அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

விருப்ப ஓய்வுபெற்ற கர்நாடக ஐபிஎஸ் அதிகாரியும், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான அண்ணாமலை பாஜகவில் இணைந்த பின்னர், மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சியில் போட்டியிட்ட அண்ணாமலை வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் இணை அமைச்சராக தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனால் தமிழக பாஜக தலைவர் மாற்றப்படலாம் என்கிற தகவலும், அண்ணாமலை தலைவராக்கப்படுவார் என்கிற தகவலும் வெளியானது.

இந்நிலையில், அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக டெல்லி பாஜக தலைமை நேற்று (ஜூலை 08) அறிவித்தது.

இதையடுத்து, இன்று (ஜூலை 09) அண்ணாமலை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், “நமது தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா எனக்கு வழங்கி இருக்கும் தமிழக பாஜகவின் தலைவர் எனும் பொறுப்பு என்னை பணிவும், பெருமையும் கொள்ளச் செய்கிறது.

நம் கட்சி பல ஆண்டுகளாக பல காரியகர்த்தாக்களின் உயிர்த் தியாகங்களாலும் மற்றும் பல தன்னலமற்ற தலைவர்களின் தியாகங்களாலும் வழிநடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நம்முடைய கட்சியின் மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலுடன், ஒரு அணியாக, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, தேசியத் தலைமை என் மீது வைத்துள்ள நம்பிக்கையைப் போற்றும் விதமாக உறுதியுடன் நடப்போம்.

அழகான மாநிலமான நம் தமிழகம், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்ப் பற்றும், நமது தமிழ்ப் பண்பாடு மீது அவர் கொண்டுள்ள பெருமையும் அனைவருக்கும் தெரியும். நம்முடைய கட்சியின் சித்தாந்தத்தையும், உயிரான தேசப் பற்றையும் மற்றும் தமிழ் மக்கள் மீது பிரதமர் கொண்டுள்ள பேரன்பையும், தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்லும் வரை நாங்கள் ஓயமாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.