தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பொறுப்பேற்றார்.

தமிழகத்தில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காக்கவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், 1989ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 13ஆம் தேதி, அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது.

அதற்குப் பிறகு, 2010ஆம் ஆண்டு, மீண்டும் கருணாநிதியால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டம், 2010 (Act 21 of 2010)-ன்படி, சட்டபூர்வ அதிகாரம் பெற்ற ஆணையமாகச் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காகச் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருத்தியமைத்து, அதன் தலைவராக எஸ்.பீட்டர் அல்போன்ஸை நியமித்து, கடந்த ஜூன் 29-ம் தேதி உத்தரவிட்டார்.

எஸ்.பீட்டர் அல்போன்ஸ் 1989 மற்றும் 1991-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்தும், 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கடையநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்தும் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

இந்நிலையில், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக, பீட்டர் அல்போன்ஸ் இன்று (ஜூலை 07) சென்னை, அண்ணா சாலையில் அந்த ஆணையத்திற்கு எனத் தனியாக இயங்கும் அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.

துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த மஸ்தான் பொறுப்பேற்றார். உறுப்பினர்களாக தமீம் அன்சாரி, ஹர்பஜன் சிங் சூரி, மன்ஞ்ஜித் சிங் நய்யர், பைரேலால் ஜெயின் உள்ளிட்ட 6 உறுப்பினர்களும் பொறுப்பேற்றனர். இந்த ஆணையத்தில், புத்தம், ஜெயின் உள்ளிட்ட சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பொறுப்பேற்றவுடன் செய்தியாளர்களிடம் பேசிய பீட்டர் அல்போன்ஸ், “முதல்வரின் நல்லெண்ணத் தூதுவர்களாக நாங்கள் நியமிக்கப்பட்டுள்ளோம். இந்தப் பொறுப்பின் மூலம் அமைச்சரின் தலைமையில், தமிழகம் எங்கும் சுற்றுப்பயணம் செய்து, சிறுபான்மை மக்களின் தேவைகளை அறிந்து, தமிழக அரசின், முதல்வரின் கவனத்திற்குக் கொண்டுவந்து நல்ல பணிகளை ஆற்றுவோம்” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.