தமிழ்நாட்டிற்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள 85,59,540 கரோனா தடுப்பூசி டோஸ்களில், மொத்தம் 71,46,590 டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், 14,12,950 டோஸ்கள் இருப்பு உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் இந்திய அரசின் ஐந்து அம்ச உத்திகளில் பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை, சரியான வழிகாட்டு நெறிமுறை‌ ஆகியவற்றுடன் தடுப்பூசி, மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்திய அரசு தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்குவதுடன், அவற்றின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிக்க கூடுதலாக பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

மூன்றாவது கட்ட விலையில்லா தடுப்பூசித் திட்டம், மே 1 முதல் தொடங்கியது. இதன்படி, ஒவ்வொரு மாதமும் மத்திய மருந்துகள் ஆய்வகம் அனுமதி அளித்த மொத்த தடுப்பூசிகளில் 50 சதவீதத்தை இந்திய அரசு கொள்முதல் செய்யும். முன்பைப் போலவே, இந்தத் தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.

இதுவரை, சுமார் 20 கோடி (20,28,09,250) கோவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. நேற்று இரவு 7 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மே 14 வரை 18,43,67,772 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன.
1,84,41,478 கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன.
அடுத்த மூன்று நாட்களில், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 50,95,640 தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு கூடுதலாக வழங்கவுள்ளது.

தமிழக நிலவரம்:

தமிழ்நாட்டிற்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள 85,59,540 தடுப்பூசி டோஸ்களில், மொத்தம் 71,46,590 டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 14,12,950 டோஸ்கள் இருப்பு உள்ளன.

புதுச்சேரி நிலவரம்:

புதுச்சேரிக்கு இதுவரை 4,27,140 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2,29,282 டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1,97,858 டோஸ்கள் இருப்பு உள்ளன.