ஹரியாணா அரசு மருத்துவமனையில் நேற்று இரவு கரோனா தடுப்பூசிகள் திருடப்பட்ட நிலையில், அதன் முக்கியத்துவத்தை அறியாமல் திருடியதாகக் கடிதத்துடன் அவற்றைத் திருடர்கள் திருப்பி வைத்துள்ளனர்.

ஹரியாணாவில் பொதுமக்களுக்குச் செலுத்தப்படும் கரோனா தடுப்பூசிகள் சுமார் 1,700 புட்டிகள் ஜிந்த் மாவட்ட அரசு மருத்துவமனையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. இங்கு நேற்று முன்தினம் இரவு நுழைந்த திருடர்கள் கும்பல், தடுப்பூசிகளை ஐஸ் பெட்டிகளுடன் திருடியது. இந்த செய்தி மறுநாள் காலை வெளியாகி அப்பகுதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவாகியது.

இந்நிலையில், அம்மருத்துவமனையின் எதிரிலுள்ள தேநீர் தாபாவை அதன் உரிமையாளர் நேற்று திறக்க முடியாமல், இன்று திறந்துள்ளார். அப்போது தனது தாபா முன்பாக ஐஸ் பெட்டிகளுடன் தடுப்பூசிகள் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு, காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளார்.

அதில் வைக்கப்பட்டிருந்த கடிதத்தில், ”கரோனா பரவுவதன் பாதிப்பைப் புரிந்துகொள்ளாமல் இந்தத் திருட்டைச் செய்துவிட்டோம். திருடப்பட்ட தடுப்பூசிகளை இந்த தாபாவின் முன் வைத்துள்ளோம். நடந்த தவறுக்கு எங்களை மன்னிக்க வேண்டுகிறோம்” என எழுதப்பட்டிருந்தது.

இதுகுறித்து ஜிந்த் நகர காவல்நிலைய ஆய்வாளரான ராஜேந்தர்சிங் கூறும்போது, ”இந்த தடுப்பூசிகளில் கோவாக்சின் புட்டிகள் 440 மற்றும் கோவிஷீல்டு 1,270 புட்டிகள் அப்படியே இருந்துள்ளன. எனினும் மீட்கப்பட்ட தடுப்பூசிப் புட்டிகளை மீண்டும் பயன்படுத்த முடியுமா? என மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

திரைப்படங்களில் வருவது போன்ற இந்த சம்பவம் நிஜத்திலும் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.