அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததுடன், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில் தலைமறைவான மணிகண்டனை அடையாறு அனைத்து மகளிர் போலீஸார் ஜூன் 20-ம் தேதி கைது செய்தனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிகண்டன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, தனக்குத் திருமணமாகி, குழந்தைகள் உள்ளது தெரிந்தே, ஐந்து ஆண்டுகள் நடிகை தன்னுடன் வசித்துள்ளதாகவும், அதனால் பாலியல் வன்கொடுமை என்ற கேள்வியே எழவில்லை என்றும், கருக்கலைப்புக்கு நடிகையே ஒப்புதல் அளித்துள்ளதாகவும் மணிகண்டன் தரப்பில் வாதிடப்பட்டது.
புகார்தாரரான நடிகை தரப்பில், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்து கொள்வதாகக் கூறியதால், அவருடன் கணவன் – மனைவியாக வாழத் தொடங்கியதாகவும், ஏமாற்றிய மணிகண்டனின் ஜாமீனை நிராகரிக்க வேண்டுமெனவும் வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பில் செல்வாக்கான நபர் என்பதால், சாட்சிகளைக் கலைக்கக்கூடும் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல்குமார், இன்று (ஜூலை 07) அளித்த தீர்ப்பில், மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அதன்படி, 2 வாரங்களுக்கு காவல்துறை முன்பு தினமும் ஆஜராகி கையெழுத்திடவும், அதன் பிறகு விசாரணைக்குத் தேவைப்படும் போதெல்லாம் ஆஜராகவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மணிகண்டனின் பாஸ்போர்ட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.