தமிழகத்தில் தனிப்பட்ட துணை நகரங்களுக்கு பதில், தொழில், சுகாதாரம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் உள்ளிட்ட துறைகளின் பங்களிப்புடன் ஒருங்கிணைந்த வளர்ச்சி மையங்களை உருவாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

தலைமைச் செயலகத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயல்பாடுகள் குறித்தும், திட்டப்பணிகள், புதிய
திட்டங்கள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: உள்ளாட்சி அமைப்புகள் அதற்குரிய எல்லைப் பகுதியில் மட்டுமே கவனம்
செலுத்துவதால், வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப முக்கிய நகரங்களில் வளர்ச்சிக் குழுமங்களை ஏற்படுத்தி, நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு நீண்டகாலத் தேவைகளை கருத்தில் கொண்டு முறையாக திட்டமிட்டு, உட்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

நகர ஊரமைப்பு இயக்ககம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் திட்ட அனுமதி, கட்டிட அனுமதி ஆகியவற்றை வெளிப்படைத் தன்மையுடன் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் புதிய சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். உரிய காலத்துக்குள் ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை
ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதையும் 12 மண்டலங்களாகப் பிரித்து மண்டல திட்டங்கள் உருவாக்கவும், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி போன்ற 22 நகராட்சிகளுக்கு புதிய முழுமைத் திட்டங்களை தயாரிக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.

தனிப்பட்ட துணை நகரங்களுக்குப் பதில் தொழில், சுகாதாரம், நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, கல்வி, வீட்டுவசதி, நகர்ப்
புற வளர்ச்சித் துறைகள், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகியவற்றின் பங்களிப்புடன் ஒருங்கிணைந்த வளர்ச்சி மையங்களை உருவாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் சு.முத்துச்சாமி, தா.மோ.அன்பரசன், தலைமைச்செயலர் வெ. இறையன்பு, நிதித்துறை செயலர்
ச.கிருஷ்ணன், வீட்டுவசதித்துறைச் செயலர் ஹிதேஷ்குமார் எஸ்.மக்வானா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.