தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையில் திமுகவின் அணுகுமுறை காரணமாக பழைய மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இன்று தனித்தனியாக கூட்டணிக்கட்சிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.

2016 படுதோல்விக்குப்பின் மக்கள் நலக்கூட்டணியில் இருந்த இடதுசாரிகள், மதிமுக, விசிக அனைவரும் பல்வேறு காலக்கட்டங்களில் திமுகவுடன் ஒன்று சேர்ந்தனர். கடந்த 5 ஆண்டுகளாக ஒன்றாக பல்வேறு போராட்டங்களில் களம் கண்ட அவர்கள் தோழமைக்கட்சிகளாக ஒன்றிணைந்தனர். அந்தக்கூட்டணி சுமுகமான முறையில் தொகுதி பங்கீடு செய்து மக்களவை தேர்தலை 2019-ம் ஆண்டு சந்தித்தது. பெரு வெற்றியும் பெற்றது.

அதே கூட்டணி அதன் பின்னரும் பல போராட்டங்களை ஒருங்கிணைந்து நடத்தியது. அதிமுக கூட்டணியில் பல சலசலப்புகள் இருந்தாலும் திமுக கூட்டணியில் மட்டும் எவ்வித சலசலப்புமின்றி கூட்டணி தொடர்ந்தது. ஆனால் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிய வேளையில் கூட்டணியில் வெடித்தது பிரச்சினை. இதற்கு காரணம் நாங்கள் அல்ல முழுக்க முழுக்க திமுகவின் அணுகுமுறைதான் என தோழமைக்கட்சிகள் பக்கம் தெரிவிக்கின்றனர்.

ஆனால் அதிக தொகுதிகளை வாங்கி வெற்றியை எதிரணிக்கு பரிசாக கொடுத்தால் இதுநாள் வரை கட்டிக்காத்து வந்த வெற்றிக்கனியை பறிக்க முடியாது வெற்றிபெறும் அளவு தொகுதியில் நில்லுங்கள், சின்னம் இல்லாதவர்கள் திமுக சின்னத்தில் நில்லுங்கள் என்பது திமுக தரப்பு வாதமாக உள்ளது.

என்னதான் அறுதி பெரும்பான்மை பெற நினைத்தாலும் அதற்காக மொத்த தொகுதியையும் தானே வைத்துக்கொள்ள நினைப்பது சரியா தோழமைக்கட்சிகளும் பழைய அளவு தொகுதிகளைக் கேட்கவில்லையே சூழ்நிலை உணர்ந்து நாங்களும் எங்கள் கோரிக்கையை சுருக்கிக்கொள்ளும்போது திமுக தரப்பு அதற்கு ஏற்ப அணுசரிக்காமல் பெரியண்ணன் போக்கை கையிலெடுப்பதா என்கிற வாதம் தோழமைக்கட்சி நிர்வாகிகள் தரப்பில் ஓடுகிறது.

இரண்டு நேரெதிர் கருத்துகள் சந்திக்கும்போது வெற்றியை இலக்காக வைத்து விட்டுக்கொடுப்பதே திமுக தலைவர் கருணாநிதியின் போக்காக இருந்தது, ஆனால் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக திமுக நிர்வாகிகள் உள்ளனர் என்று ஒரு கருத்தும் உள்ளது. திமுக தனது பிடிவாதத்திலிருந்து சற்று இறங்கி வந்தால் மட்டுமே கூட்டணிப் பேச்சு வார்த்தை என்பதில் கூட்டணிக்கட்சிகள் உறுதியாக உள்ளதாக தெரிகிறது.

இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று மாநில நிர்வாகக்குழு கூட்டத்தை கூட்டியுள்ளது. மதிமுக வரும் 6-ம் தேதி உயர் நிலைக்கூட்டம் நடத்த உள்ளது. விசிக இன்று காலை நிர்வாகக்கூட்டம் நடத்துகிறது. 6 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்ட விசிக தலைவர் திருமாவளவன் கையெழுத்திடவில்லை. இன்று விசிக என்ன முடிவெடுக்க உள்ளது என்பது இனிதான் தெரியும்.

காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் இன்று நடக்கிறது. இதில் மேலிட பொறுப்பாளர் வீரப்ப மொய்லி கலந்துக்கொள்கிறார். ஆகவே கூட்டணிக்கட்சிகள் தனித்தனியாக ஆலோசனை நடத்திய பின்னர் என்ன முடிவெடுக்கப்படும் என்பது தெரிய வரும்.