‘த்ரிஷ்யம் 2’ படத்தைப் பார்த்துவிட்டு, ஜீத்து ஜோசப்பைப் பாராட்டி குறுந்தகவல் அனுப்பியுள்ளார் ராஜமெளலி.

மலையாளத்தில் மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘த்ரிஷ்யம்’. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணியில் ஓடிடி தளத்தில் வெளியான படம் ‘த்ரிஷ்யம் 2’.

‘த்ரிஷ்யம் 2’ படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலக பிரபலங்கள் படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தார்கள். மேலும், இதர மொழிகளில் ரீமேக் செய்யும் பணிகளையும் ‘த்ரிஷ்யம் 2’ படக்குழு தொடங்கியுள்ளது. முதலாவதாக தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநரான ராஜமெளலி ‘த்ரிஷ்யம் 2’ படத்துக்குப் பாராட்டு தெரிவித்து ஜீத்து ஜோசப்பிற்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஜீத்து ஜோசப் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

‘த்ரிஷ்யம் 2’ படத்தைப் பாராட்டி ஜீத்து ஜோசப்பிற்கு ராஜமெளலி அனுப்பியுள்ள குறுந்தகவலில் கூறியிருப்பதாவது:

“வணக்கம் ஜீத்து, நான் ராஜமௌலி, இயக்குநர். சில நாட்களுக்கு முன் ‘த்ரிஷ்யம் 2’ பார்த்தேன். அது என் சிந்தனையில் ஓடிக்கொண்டே இருந்ததால், மீண்டும் சென்று முதல் பாகத்தைப் பார்த்தேன். (நான் முன்பு ஒரு முறை தெலுங்கில் மட்டுமே வெளியான சமயத்தில் பார்த்திருந்தேன்)

இயக்கம், திரைக்கதை, படத்தொகுப்பு, நடிப்பு என ஒவ்வொரு விஷயமும் அற்புதமாக இருந்தது என்பதை நான் கண்டிப்பாகச் சொல்லியாக வேண்டும். மேலும், இந்தக் கதை எழுதப்பட்ட விதம் வேறொரு தளத்தில் இருக்கிறது. உலகத் தரத்தில் இருக்கிறது.

முதல் பாகமே தலைசிறந்த படைப்புதான். இரண்டாம் பாகம் என்று ஒன்றை யோசித்து, அது முதல் பாகத்தோடு எந்தச் சிக்கலுமில்லாமல் பொருந்திப் போவது, அதே அளவு பரபரப்போடு, ரசிகர்களைக் கட்டிப்போடும் வகையில் அதைச் சொன்னது எல்லாம் அசாதாரணமான விஷயம். உங்களிடமிருந்து இன்னும் பல தலைசிறந்த படைப்புகளை எதிர்நோக்கியுள்ளேன்”.

இவ்வாறு ராஜமெளலி தெரிவித்துள்ளார்.